சனி, 9 ஜூன், 2018

1088. காந்தி -30

24. முழத்துண்டு விரதம்.
கல்கி 


கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ (பகுதி 2 ) என்ற நூலில் வந்த  24-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே நூலில் உள்ளன ]
===

தமிழ் நாட்டுக்கும் மகாத்மா காந்திக்கும் நெருங்கிய தொடர்புகள் சில உண்டு. தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரஹத்தில் மகாத்மாவுக்குத் துணை நின்றவர்களில் தமிழர்கள் முக்கியமானவர்கள். அந்த சத்தியாக்கிரஹப் போரில் தமிழ்நாட்டு வள்ளியம்மை உயிர்த்தியாகம் செய்து அழியாப் புகழ்பெற்றாள்.

ராவ்லட் சட்டத்தை எதிர்த்து எப்படி இயக்கம் நடத்துவதென்று மகாத்மா காந்தி யோசித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு சமயம் சென்னை வந்தார். ஏப்ரல் 6-ஆம் தேதி அகில இந்திய ஹர்த்தால் நடத்தவேண்டும் என்ற எண்ணம் சென்னையில் தங்கியிருந்த போது மகாத்மாவின் மனதில் உதயமாயிற்று.

இவற்றைக் காட்டிலும் மகாத்மாவின் வாழ்க்கையில் பெரும் மாறுதல் உண்டாக்கிய ஒரு சம்பவம் 1921 செப்டம்பரில் மகாத்மா காந்தி தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்த போது நிகழ்ந்தது.

அந்தநாளில் பட்டணங்களிலும் கிராமங்களிலும் காங்கிரஸ் பிரசாரம் செய்வதற்காகச் செல்வோர் தங்கள் பிரசங்கத்துக்கு முக்கியமாகக் கையாண்ட விஷயம் ஒன்று உண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் இங்கிலீஷ்காரர்கள் துணிமூட்டையைத் தோளிலே சுமந்துகொண்டு இந்தியாவில் துணி விற்க வந்ததிலிருந்து பிரசங்கத்தைத் தொடங்குவார்கள். ஆங்கில நாட்டுத் துணியோடு இந்திய சுதேசித் துணி போட்டி போடாமலிருப்பதற்கு வெள்ளைக்காரர்கள் கையாண்ட முறைகளைச் சொல்வார்கள். இந்தியாவில் கைத்தறியில் உற்பத்தியான துணிகளின் மேன்மையைப் பற்றிப் பேசுவார்கள். டாக்கா மஸ்லின் துணியின் நயத்தைப்பற்றியும், ஒரு பீஸ் மஸ்லினை ஒரு மோதிரத்துக்குள் அடைத்த கதையைப் பற்றியும், அவுரங்க ஜீப்பின் குமாரி டாக்கா மஸ்லின் உடுத்திக்கொண்ட வரலாற்றைக் குறித்தும் விஸ்தாரமாகச் சொல்வார்கள். அத்தகைய அதிசயமான துணிகளை நெய்த கைத்தறிக்காரர்களின் கட்டை விரல்களை ஆங்கிலேயர் துண்டித்தெறிந்த அக்கிரமக் கொடுமையைப் பற்றி இரத்தம் கொதிக்கும்படி ஆத்திரமாய்ப் பேசுவார்கள்.

"இங்கிலீஷ் ராஜ்யம் இந்தியாவில் லங்காஷயர் துணி வியா பாரத்துக்காகவே ஏற்பட்டது. இப்போதும் லங்காஷயரின் நன்மையை முன்னிட்டே இந்தியா ஆளப்பட்டு வருகிறது. என்றையதினம் இந்தியர்கள் அன்னியத் துணியை வாங்குவதை அடியோடு நிறுத்துகிறார்களோ, அன்றைக்கே இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார் மூட்டைகட்டி விடுவார்கள்!" என்று கூறுவார்கள்.

இவ்வாறெல்லாம் அந்தநாளில் காங்கிரஸ் வாதிகள் பிரசாரம் செய்ததில் பெரிதும் உண்மை இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனாலேயே 1905-1906-ல் வங்காளத்தில் ஒரு தடவை சுதேசி இயக்கம் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சுதேசி இயக்கத்தின் நோக்கம் பிரிட்டிஷ் துணிகளைப் பகிஷ்கரிப்பதுதான். இந்த இயக்கத்துக்கு அப்போது சில இடையூறுகள் ஏற்பட்டன. அவற்றில் முக்கியமானது பம்பாய்--ஆமதாபாத் ஆலை முதலாளிகளின் பேராசையாகும். சுதேசி இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் ஆலைத் துணிகளின் விலைகளைக் கண்டபடி உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள்.

இதன் பலன் என்ன ஆயிற்று என்றால், கொஞ்ச காலத்துக்கெல்லாம் பொது மக்களில் பலருக்குச் சுதேசி இயக்கத்தின் பேரில் பற்று விட்டுப் போய்விட்டது.

இந்தப் பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் காந்தி மகான் நன்கு அறிந்திருந்தார். இந்தியாவின் அடிமைத்தனம் போக வேண்டுமானால். இந்தியர்கள் அன்னியத் துணி வாங்குவதையும் அணிவதையும் அடியோடு நிறுத்தியே யாகவே்ண்டும். ஆனால், முன்னொரு தடவை நடந்ததுபோல் ஆலைமுதலாளிகள் பொதுமக்களின் தலையில் கையை வைத்துக் கொள்ளை லாபம் தட்டுவதையும் தடுக்க வேண்டும். இதற்குச் சாதனமாக மகாத்மா காந்தி கைராட்டை இயக்கத்தைக் கைக்கொண்டார். கை ராட்டையில் நூல் நூற்று அந்த நூலைக்கொண்டு கைத்தறியில் நெய்த கதரையே உடுத்தவேண்டும் என்று சொன்னார். இப்படிக் கதர் உடுத்துவதை வற்புறுத்துவதால் ஆலை முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கலாம். இது மட்டுமல்ல. மகாத்மாவின் வாழ்க்கைத் தத்துவத்தை நிறைவேற்றக் கைராட்டையும் கதரும் தகுந்த உபகரணங்களாயிருந்தன. மகாத்மா காந்தி தற்கால நவநாகரிக வாழ்க்கையை வெறுத்தார். ஆடம்பர சுகபோக வாழ்க்கையை வெறுத்தார். கைராட்டையும் கதரும் எளிய வாழ்க்கை முறையின் சின்னங்களா யிருந்தன. மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் உடலை உழைத்துப் பாடுபடவேண்டும் என்று மகாத்மா கருதினார். அப்படி எல்லாரும் உடல் உழைப்பைக் கைக்கொள்ளக் கைராட்டை நல்ல சாதனமாயிருந்தது. இயந்திர நாகரிகம் மனித சமூகத்தின் ஆத்மீக அழிவுக்குக் காரணமாகும் என்பது காந்திஜியின் கொள்கை. கைராட்டை இயந்திர நாகரிகத்தை எதிர்த்து நிற்பதற்கு ஆயுதமாயிருந்தது. இந்தியாவின் ஏழு லட்சம் கிராமங்களில் வாழும் மக்களை மகாத்மா 'தரித்திர நாராயணர்'களாகக் கண்டார். அவர்களுடைய வறுமையை நினைத்து உருகினார். வருஷத்தில் ஆறு மாதம் கிராமவாசிகள் வேலையில்லாமலிருக்கிறார்கள் என்பதும் மகாத்மாவுக்குத் தெரிந்தது. லட்சக்கணக்கான கிராமவாசிகளுக்கு வேலையில்லாத நாட்களில் வேலை கொடுக்கக் கூடியது கைராட்டினம் ஒன்றுதான் என்பதை மகாத்மா கண்டார். அநாதை ஸ்திரீகளும் வயதான மூதாட்டிகளும் பிறரை அண்டாமலும் பட்டினி கிடக்காமலும் 'இஷ்டமுடன் தம் குடிசை நிழலிலிருந்து நூல் இழைத்துப் பிழைக்கலாம்' என்று கண்டார். இத்தகைய காரணங்களினால் கைராட்டினத்தை மகாத்மா காந்தி 'காமதேனு' என்று போற்றினார். அதைக் குறித்து இடைவிடாது பேசியும் எழுதியும் வந்தார்.

இந்தியா தேசத்தின் சிறந்த அறிவாளிகளில் சிலருக்கு மகாத்மா காந்தியின் கைராட்டைப் பிரசாரம் பிடிக்கவில்லை. அவ்விதம் பிடிக்காதவர்களில் ஒருவர் மகாகவி ரவீந்திரநாத தாகூர். மகாத்மாவிடம் மகாகவி எத்தனையோ அபிமானமும் மரியாதையும் கொண்டிருந்தவர். 'மனித சமூகத்தை ரட்சிக்க அவதரித்த மகாபுருஷர்களில் ஒருவர் மகாத்மா காந்தி' என்று டாக்டர் தாகூர் பலமுறையும் தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் காந்திஜியின் கைராட்டைப் பிரசாரத்தை மகாகவி தாகூர் விரும்பவில்லை. இராட்டைப் பிரசாரத்தைப் "பிற்போக்கு இயக்கம்" என்று தாகூர் பகிரங்கமாகக் கூறிக் கண்டித்தார். "இயந்திரங்களினால் மனித சமூகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்கிறது. காந்திஜி அந்த முன்னேற்றத்தை யெல்லாம் புறக்கணித்து இந்திய மக்களைப் பல நூறு வருஷம் பின்னால் கொண்டு போகப் பார்க்கிறார்" என்று டாக்டர் தாகூர் சொன்னார்.

காந்தி மகான் மகாகவி தாகூரைக் 'குருதேவ்' என்று போற்றி வந்தவர். தென்னாப்பிரிக்காவில் தம்முடன் டால்ஸ் டாய் பண்ணையில் வாழ்ந்தவர்களை இந்தியா வந்ததும் முதன் முதலில் தாகூரின் சாந்திநிகேதனுக்கே மகாத்மா அனுப்பினார் அல்லவா? ஆனபோதிலும் கைராட்டை இயக்கத்தைப் பற்றியவரையில் மகாத்மா காந்தி குருதேவரின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. "வானத்தில் ஆனந்தமாய்ப் பாடிக் கொண்டு பறக்கும் வானம்பாடிக்குப் பூமியிலுள்ள கஷ்டங்கள் எப்படித் தெரியும்? குருதேவர் தாகூர் மகாகவி; அவருக்கு ஏழைகளின் பட்டினிக் கொடுமை இத்தகையது என்று தெரியாது. தெரிந்திருந்தால் கைராட்டைதான் ஏழைகளின் காமதேனு என்பதை ஒப்புக்கொண்டிருப்பார்" என்று காந்தி மகான் அணுவளவும் தமது கொள்கையிலிருந்து வழுவாமல் தாகூருக்குப் பதில் கூறினார்.

1921-ஆம் வருஷம் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் அன்னியத் துணி பகிஷ்காரத்தைப் பூரணமாய் நடத்திவிட வேண்டும் என்று காந்திஜி கருதியிருக்கிறார். செப்டம்பரில் அத்திட்டம் நிறைவேறி விட்டால் அடுத்து வரும் மாதங்களில் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கி வருஷக் கடைசிக்குள் சுய ராஜ்யத்தை ஸ்தாபித்து விடலாம் என்று உத்தேசித்திருந்தார்.

வால்ட்டேரில் மௌலானா முகம்மதலி சிறைப்பட்டது மகாத்மாவின் சுயராஜ்ய தாகத்தைப் பன்மடங்கு ஆக்கியது. விதேசித் துணி பகிஷ்காரத்தை நிறைவேற்றுவதில் அவருடைய ஆர்வமும் பெருகிற்று. இந்த ஆர்வத்துடனே தான் சென்னையிலிருந்து புறப்பட்டுத் தமிழ்நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்யத் தொடங்கினார். அவருடன் மௌலானா ஆஜாத் சோபானி என்னும் முஸ்லிம் பெரியாரும் பிரயாணம் செய்தார்.

காந்திஜி கோஷ்டியார் ஏறிய ரயில் விழுப்புரம் சென்றது. விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் எள்ளுப் போட்டால் எள்ளு விழாதபடி பதினாயிரக் கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். காந்திஜி அவர்களுக்குக் கைராட்டையும் கதரையும் பற்றி எடுத்துச் சொல்ல விரும்பினார். ஆனால் அது சாத்தியப் படவில்லை. கூட்டத்தில் அவ்வளவு இரைச்சல். "உட்காருங்கோ!" "சத்தம் போடாதேங்கோ!" என்று நூற்றுக் கணக்கான குரல்கள் ஏக காலத்தில் எழுந்தன. ஜனங்கள் போட்ட இரைச்சலுடன் இரைச்சலை அடக்க முயன்றவர்களின் கூப்பாடும் சேர்ந்து ஏக இரைச்சலாகிவிட்டது. காந்திஜி ஒரு வார்த்தைகூட அக்கூட்டத்தில் பேச முடியவில்லை. ரயில் வண்டி மேலே சென்றது.


பறங்கிப் பேட்டையில் மிஸ் பீடர்ஸன் என்னும் ஐரோப்பிய அம்மையார் ஆரம்பித்திருந்த ஆசிரமத்துக்கு மகாத்மா அஸ்திவாரம் நாட்டினார். பிறகு கூடலூரில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுக் கும்பகோணத்துக்கு வந்தார். கும்பகோணத்தில் மகாத்மாவைத் தரிசிக்க நாற்பதினாயிரம் ஜனங்கள் கூடியிருந்தார்கள். அவ்வளவு பேரும் காந்திஜியைப் பக்கத்தில் சென்று பார்க்க முயன்றார்கள். கூட்டத்தில் எழுந்த கூச்சலையும் கூப்பாட்டையும் சொல்லி முடியாது. கும்பகோணம் கூட்டத்திலும் மகாத்மாவினால் பேச முடியவில்லை. அங்கிருந்து திரிசிராப்பள்ளிக்குச் சென்றார்.

திரிசிராப்பள்ளியில் தேச பக்தர் டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன் அவர்களின் வீட்டில் மகாத்மாவுக்கு நிம்மதி கிடைத்தது. "மகாத்மாவுடன் ஏழு மாதம்" என்னும் நூலில் ஸ்ரீ கிருஷ்ணதாஸ் என்பவர் இதைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்தப் பிரயாணத்தின் போது மகாத்மாவின் காரியதரிசியாகத் தொண்டு செய்தவர் ஸ்ரீ கிருஷ்ணதாஸ். அவர் மேற்கூறிய புத்தகத்தில் எழுதியிருப்பதாவது:-

"திரிசிராப்பள்ளி ஸ்டே ஷனை அடைந்ததும் எங்களுக்கெல்லாம் மிக்க வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. ரயில்வே நிலையத்தில் ஏராளனமான ஜனங்கள் கூடியிருந்தபோதிலும் இரைச்சல் என்பதே கிடையாது. அன்றைக்கு மகாத்மாவின் மௌன தினம். ரயிலை விட்டு அமைதியாக இறங்கி ஜாகைக்குப் போக முடிந்தது. இங்கே ஜனங்களிடம் காணப்பட்ட அமைதியும் ஒழுங்கும், வழியெல்லாம் ஜனக்கூட்டத்தின் அமளியினால் கஷ்டப்பட்டு வந்த எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ரயில்வே நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள டாக்டர் ராஜனுடைய வீட்டில் எங்களுக்கு ஜாகை. டாக்டர் ராஜன் அப்போது மாகாண காங்கிரசின் காரியதரிசி. அவருடைய வீடு ஏறக்குறைய ஓர் ஆசிரமமாக மாறியிருந்தது. தம்முடைய குடும்பத்தில் யாரும் இனிக் கடையில் துணி வாங்கக்கூடாது என்றும் அவரவர்களுடைய தேவைக்கு வேண்டிய நூல் அவர்களே நூற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு விட்டதாக டாக்டர் ராஜன் மகாத்மாஜியிடம் தெரியப்படுத்தினார். டாக்டர் ராஜனுடைய வீடு திருச்சி நகரத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய தோட்டத்தின் நடுவில் இருந்தது. புயலிலும் சண்டமாருதத்திலும் அடிபட்டுத் திண்டாடிய கப்பல் ஒரு அமைதியான துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தால் பிரயாணிகள் எவ்வளவு ஆனந்தம் அடைவார் களோ அவ்வளவு ஆனந்தம் நாங்களும் அடைந்தோம்.

இவ்வாறு திருச்சியில் டாக்டர் ராஜனுடைய கண்டிப்பான பாதுகாப்பின் காரணமாக மகாத்மாவுக்குக் கொஞ்சம் ஓய்வும் அமைதியும் கிடைத்தது. ஆனால் அமைதி வெளியில் இருந்ததே தவிர அவருடைய மனதில் நிம்மதி ஏற்படவில்லை. விதேசித் துணியைப் பகிஷ்கரிப்பதிலும் கதரைப் பெருக்குவதிலும் அவருடைய மனதில் குடிகொண்டிருந்த தாபத்தை அவர் மக்களுக்கு வெளியிட விரும்பினார்.

ஆனால் ஜனங்களோ மகாத்மாவை அருகில் சென்று பார்த்துவிட வேண்டும் என்று பிரயத்தனம் செய்தார்கள். மாபெருங் கூட்டம் கூடி மக்கள் போட்ட கூச்சலினால் மகாத்மாவின் வார்த்தைகள் அவர்கள் காதில் விழுவதே இல்லை.

"ஐயோ! நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றனவே. இவ்வளவு ஜனக்களும் வந்து கூட்டம் கூடிக் கூச்சல் போட்டு விட்டு என்னைப் பார்த்து விட்டுப் போய் விடுகிறார்களே? கைராட்டையைப் பற்றியும் கதரைப் பற்றியும் இவர்களுக்கு எவ்வாறு சொல்வேன்? என் இதயக் கொதிப்பை இவர்களுக்கு எவ்வாறு வெளியிடுவேன்?" என்று மகாத்மா யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

திருச்சியிலும் ஸ்ரீரங்கத்திலும் பொதுக் கூட்டங்களில் ஓரளவு அமைதி நிலவியது. திருச்சியிலிருந்து மகாத்மா திண்டுக்கல்லுக்குப் போனார். அங்கே பழைய கதைதான். கூட்டம் பிரமாதம்; கூச்சலும் பிரமாதம். மகாத்மாவினால் ஒரு வார்த்தையும் பேச முடியவில்லை. திண்டுக்கல்லிலிருந்து மதுரைக்குப் போனார். மதுரை மகாத்மாவுக்கு அளித்த வரவேற்பு மற்ற ஊர் வரவேற்புகளையெல்லாம் தூக்கி அடித்து விட்டது. அவ்வளவு லட்சக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்தார்கள். ஆனால் பொதுக் கூட்டத்தைப் பற்றிய வரையில் பழைய கதையேதான்! அமைதியை நிலைநாட்ட மதுரைத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றார்கள். மகாத்மாவும் முயன்று பார்த்தார். ஒன்றும் பயன்படவில்லை. மகாத்மா பிரசங்கம் செய்யாமலே கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லும்படி நேர்ந்தது.

மதுரையில் அன்றிரவு மகாத்மாவின் ஜாகையில் அவரைப் பல பிரமுகர்கள் வந்து சந்தித்தார்கள். அவர்களுடன் மகாத்மா பொதுப்படையாக வார்த்தையாடிக் கொண்டிருந்த போதிலும் அவருடைய உள்ளம் யோசனையில் ஆழ்ந்திருந்தது. கதர் இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்குத் தகுந்த சாதனம் ஒன்றை அவர் மனம் தேடிக் கொண்டிருந்தது; அத்தகைய சாதனம் வேறு எந்த விதமாயிருக்க முடியும்? பிறருடைய தவறுகளுக்காகத் தாம் உண்ணா விரதம் இருந்து பிராயச்சித்தம் செய்து கொன்கிறவர் அல்லவா 'மகாத்மா? எனவே, மக்களுக்குக் கதரின் முக்கியத்தை உணர்த்தும்படியாகத் தாம் என்னதியாகத்தைச் செய்வது, என்ன விரதத்தை மேற்கொள்வது என்றுதான் அவர் உள்ளம் சிந்தனை செய்தது.

மகாத்மாவைச் சந்தித்துப் பேச வந்த பிரமுகர்களிள் ஒருவர் கதர் உடுத்தாமல் அந்நியத்துணி உடுத்திக்கொண்டு வந்தார். அவரைப்பார்த்து மகாத்மா "நீங்கள் என்னைப் பார்க்க வருகிறீர்களே? என்னைப் பார்த்து என்ன பயன்? நான் இவ்வளவு நாள் சொன்னபிறகும் விதேசித் துணி உடுத்தியிருக்கிறீர்களே? ஏன் கதர் அணியவில்லை?" என்று கேட்டார். "கதர் உடுத்த எனக்கு இஷ்டந்தான். ஆனால் கதர் கிடைக்கவில்லை;" என்றார் அந்தப் பிரமுகர்.

அதே நிமிஷத்தில் மகாத்மாவின் மனதில் அவர் தேடிக் கொண்டிருந்த சாதனம் உதயமாகி விட்டது. "ஆஹா! இவர் கதர் கிடைக்கவில்லை என்கிறார் நாமோ இடுப்பில் பத்துமுழ வேஷ்டி, மேலே இரண்டு சட்டை, குல்லா இவையெல்லாம் அணிந்திருக்கிறோம். எதற்காக இவ்வளவு கதர்த் துணியை நாம் அணிய வேண்டும்?" என்று தோன்றியது.

அதே சமயத்தில் தமிழ் நாட்டில் மகாத்மா கண்ட வேறொரு காட்சி நினைவுக்கு வந்தது. வடக்கேயெல்லாம் ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள் கூட மேலே சட்டை அணிவது வழக்கம். தமிழ்நாட்டில் வயற்புறங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அரையில் முழத்துணியோடு வேலை செய்வது வழக்கம். "இது ஏன்?" என்று காந்திஜி தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கேட்டார். "ஒருதுணிக்கு மேலே இரண்டாவது துணி வாங்கவும் சட்டை தைக்கவும் அவர்களிடம் பணம் இல்லை" என்று பதில் வந்தது. அந்தப் பதில் மகாத்மாவின் மனதில் பதிந்து போயிருந்தது.

இவையெல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து, மகாத்மா காந்தி அன்றிரவே ஒரு முடிவுக்கு வந்தார். மறுநாள் காலையில் மகாத்மா எழுந்ததும் தம்முடன் பிரயாணம் செய்த சகாக்களை அழைத்தார்.

"இன்று முதல் நான் இடுப்பில் ஒரு முழ அகலமுள்ள துண்டு மட்டும் அணிவேன். குளிர் அதிகமான காலங்களில் போர்த்திக்கொள்ள ஒரு துப்பட்டி உபயோகிப்பேன். மற்றப்படி சட்டை, குல்லா எதுவும் தரிக்க மாட்டேன். இப்போதைக்கு இந்த விரதத்தை ஒரு மாதத்துக்கு எடுத்துக் கொள்ளப் போகிறேன். பிறகு உசிதம் போல் யோசித்து முடிவு செய்வேன்" என்றார்.

இவ்விதம் சொல்லிவிட்டு, பத்துமுழ வேஷ்டி--சட்டை-- குல்லா எல்லாவற்றையும் களைந்து வீசி எறிந்தார். ஒரு முழ அகலமுள்ள துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டார். தம்முடைய சகாக்களைப் பார்த்து "புறப்படலாம் காரைக்குடிக்கு!" என்று சொன்னார்.

மகாத்மாவின் சீடர்கள் கதி கலங்கிப் போனார்கள். இது ஒரு விபரீதமான விரதமாகவே அவர்களுக்குத் தோன்றியது. ஒரு மாதத்திற்கு இப்போது விரதம் எடுத்துக்கொண்டாலும் அதை மகாத்மா நிரந்தரமாகவே கொண்டு விடுவார் எந்று பயந்தார்கள்! அவர்களில் ஒருவர் ஓடிப்போய் ராஜாஜியையும் டாக்டர் ராஜனையும் அழைத்து வந்தார். ராஜாஜியும் டாக்டர் ராஜனும் எவ்வளவோ காரணங்களைச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள். ஆனால் மகாத்மா தமது உறுதியைக் கைவிட விரும்பவில்லை. அதன் பேரில், இத்தகைய விரதம் எடுத்துக் கொன்வதைக் கொஞ்சநாள் தள்ளியாவது போடும்படி ராஜாஜியும் டாக்டர் ராஜனும் வேண்டிக்கொண்டார்கள். அதற்கும் மகாத்மா இணங்கவில்லை.

விடாமல் வாதம் செய்த ராஜாஜியைப் பார்த்து மகாத்மா, "உங்களுடைய வாதத்துக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை. ஆனால் நான் செய்வது தான் சரி என்பதில் எனக்குலவலேசமும் சந்தேகமில்லை" என்று சொன்னார்.

அன்று அதிகாலையில் மூன்று மணிக்குத் தாம் விழித்துக் கொண்டதாகவும், தூக்கமும் விழிப்புமாயிருந்த நிலையில் இந்த யோசனை தமக்குத் தோன்றியதாகவும், அது தம்முடைய அந்தராத்மாவின் கட்டளையென்றும், அதை மீற முடியாது என்றும் மகாத்மா தெரிவித்தார்.

பிறகு நடந்ததைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணதாஸ் எழுதியிருப்பதாவது:-

" மகாத்மாஜி இடுப்பில் மட்டும் ஒரு முழ அகலத் துணி ஒன்றை உடுத்திக் கொண்டு காரைக்குடிக்குப் புறப்படத் தயாரானார். மகாத்மாவையும் அவருடைய சகாக்களையும் ஏற்றிச் செல்வதற்கு வாசலில் நாலு மோட்டார் வண்டிகள் தயாராகக் காத்திருந்தன. மதுரைமா நகரின் ஜனங்களும் அதிகாலையிலேயே எழுந்து மகாத்மாவைத் தரிசிப்பதற்குச் சாலையின் இரு புறமும் வந்து மொய்த்துக்கொண்டு நின்றார்கள். மகாத்மா அரைத் துணி ஒன்றுடனே, சட்டை குல்லா அங்க வஸ்திரம் ஒன்றுமில்லாமல், மோட்டார் வண்டியில் போய் ஏறிய போது, அவருடைய சகாக்களும் சீடர்களும் உணர்ச்சி வசப் பட்டுத் தலை குனிந்து நின்றார்கள். திறந்த மோட்டார் வண்டி அதன் பிரயாணத்தைத் தொடங்கிய போது உதய சூரியனின் செங்கிரணங்கள் மகாத்மாவின் மார்பிலும் தலையிலும் விழுந்தன.மகாத்மாவின் தாமிர வர்ணத் திருமேனி ஒரே ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது.

பின்னர் தமிழ்நாடெங்கும் மகாத்மா காந்தி முழத்துண்டு அணிந்தே பிரயாணம் செய்தார். அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த ஜனங்கள் பரவசமடைந்தார்கள். மகாத்மா வின் பிரசங்கத்தைக் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமே அவர்களுக்கு இனி இல்லை. சட்டை அணியாத மகாத்மாவின் புனிதத் திருமேனியைத் தரிசித்த உடனேயே ஜனங்கள் மகாத்மாவின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்கள். கை ராட்டைக்கும் கதருக்கும் மகாத்மாவின் புதிய கோலமே மிகச்சிறந்த பிரசார சாதனமாயிற்று, ஆயிரம் கட்டுரைகளினாலும் பதினாயிரம் பிரசங்கங்களினாலும் சாதிக்க முடியாததை மகாத்மாவின் தவக்கோலம் சாதித்து விட்டது.
-----------------------------------------------------------


( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி

'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: