சனி, 30 ஜூன், 2018

1106. காந்தி - 33

27. தாழி உடைந்தது!
கல்கி

கல்கி’ யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( தொகுதி 2)  என்ற நூலில்  எழுதிய  27-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. 41 அத்தியாயங்களே வந்தன ]
===
1921 - ஆம் வருஷத்தின் முடிவுக்குள் இந்தியாவின் விடுதலைக்காக ஒரு பெரும் போராட்டத்தை ஆரம்பிக்க மகாத்மா விரும்பினார். அந்தப் போராட்டத்தில் பொதுஜனச் சட்ட மறுப்பு என்னும் ஆயுதத்தை உபயோகிக்க எண்ணியிருந்தார். ஆனால் இந்த ஆயுதத்தை உபயோகிப்பது நெருப்புடன் விளையாடுவதைப்போல் கடினமானது என்பதைக் காந்தி மகான் அறிந்திருந்தார். ஆகையால் எல்லாவிதமான முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள அவர் விரும்பினார்.

அந்த நாளில் தேசமெங்கும் தேசீய உற்சாகம் ததும்பிக் கொண்டிருந்தது. எனவே பர்தோலி - ஆனந்த் தாலுகாக்களில் மகாத்மா பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்தவுடனே நாட்டின் மற்றப் பகுதிகளிலும் உற்சாகிகள் அந்த இயக்கத்தை ஆரம்பித்து விடலாம். ஆனால் பர்தோலி - ஆனந்தில் பொது ஜனங்கள் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். அப்படி தயார் செய்யப் படாத இடங்களில் சட்ட மறுப்பு ஆரம்பித்து விட்டால் என்ன விபரீதம் ஏற்படும் என்று சொல்ல முடியாது.

ஆகையால், சட்டமறுப்பு சம்பந்தமான நிபந்தனைகளை ஐயமறத் தேசத்துக்கு அறிவித்து விட வேண்டியது அவசியம் என்று காந்திஜி கூறினார். இதற்கு ஒரு சந்தர்ப்பம் நவம்பர் 4 - ஆம் தேதி டில்லியில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கிடைத்தது.

சட்டமறுப்பு சம்பந்தமாக முடிவான தீர்மானம் செய்வதற்காகவே இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் கூட்டப்பட்டது. முதல் நாள் காரியக் கமிட்டியின் கூட்டம் நடந்தது. மகாத்மா தயாரித்திருந்த நகல் தீர்மானம் விவாதத்துக்கு வந்தது. இந்த நகல் தீர்மானத்தில் காந்திஜி சட்ட மறுப்புத் தொடங்குவதற்கு மிகக் கடுமையான சில நிபந்தனைகளை விதித்திருந்தார். ஒரு பகுதியில் பொதுஜனச் சட்டமறுப்பு தொடங்குவதாயிருந்தால் அந்தப் பகுதியில் 100 - க்கு 90 பேர் கதர் அணிகிறவர்களாயிருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். தனிப்பட்ட முறையில் யாரேனும் சட்டமறுப்புச் செய்ய விரும்பினால் அவருக்கு இராட்டையில் நூற்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனைகள் சில தலைவர்களுக்குப் பிடிக்கவே இல்லை. ஸ்ரீ என்.சி.கேல்கர், ஸ்ரீ வித்தல் பாய் படேல் ஆகியவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். பண்டித மோதிலால் நேருவும், ஸ்ரீ லஜபதிராயும் நிபந்தனைகளைக் கொஞ்சம் தளர்த்திவிட முயன்றார்கள். தேசபந்துதாஸ் இக்கூட்டத்தில் மகாத்மாவைப் பூரணமாக ஆதரித்தார்.

சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தி இந்தியாவுக்கு விடுதலை தேடித்தரக்கூடியவர் மகாத்மா காந்தி ஒருவர்தான் என்று எல்லாத் தலைவர்களுக்கும் தெரிந்தது. ஆனாலும் மகாத்மா காந்தி நடத்தவேண்டிய இயக்கத்துக்கு அவர் கூறிய நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளச் சில தலைவர்கள் விரும்பவில்லை! கடைசியில் பண்டித மோதிலால் நேருவின் யோசனையின் பேரில் "100 - க்கு 90 பேர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்"என்னும் நிபந்தனை "மிகப் பெரும்பாலோர் கதர் உடுத்தியிருக்க வேண்டும்" என்று மாற்றப்பட்டது
.
4-ஆம் தேதி நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் மேற்படி சமரசத் தீர்மானம் நிறைவேறியது. அத்தீர்மானம் வரி கொடாமை உள்பட பொதுஜனச் சட்ட மறுப்பை ஆரம்பிக்கும் உரிமையை மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளுக்கு அளித்தது. ஆனால் அதற்கு இன்னின்ன நிபந்தனைகள் நிறைவேறியிருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது.

இப்படி நிபந்தனைகளுடன் தீர்மானம் நிறைவேறிய போதிலும் மகாத்மாவின் மனதில் நிம்மதி ஏற்படவில்லை. சட்ட மறுப்புக்குத் தாம் விதிக்கும் நிபந்தனைகளில் மற்றத் தலைவர்களுக்குப் பூரண நம்பிக்கையில்லை என்று மகாத்மாவின் மனதில்சந்தேகம் உதித்திருந்தது. எனவே அவசரப்பட்டு எங்கேயாவது சட்டமறுப்பு ஆரம்பித்து விட்டால் காரியம் கெட்டுப்போய் விடுமே? தாம் நடத்த எண்ணியுள்ள இயக்கமும் தடைப்பட்டு விடுமே?-- இந்தக் கவலையினால் மகாத்மா காந்தி டில்லியில் கூடியிருந்த தலைவர்களைப் பார்த்து விநயமாக வேண்டிக் கொண்டதாவது-

"பொது ஜனச் சட்டமறுப்பு என்பது பூகம்பத்தைப் போன்றது. எந்தப் பிரதேசத்தில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கிறோமோ, அங்கே அரசாங்கம் ஸ்தம்பித்துவிடும். அந்தப் பிரதேசத்தில் ஒவ்வொரு போலீஸ் காரனும் மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்களும் வேலையைவிட்டு விலகிவிடுவார்கள். போலீஸ் ஸ்டே ஷன்கள், கோர்ட்டுகள், அரசாங்கக் காரியாலயங்கள் எல்லாம் பொதுஜனங்களின் உடைமையாகிவிடும். இப்படிப்பட்ட பேரியக்கத்தை நடத்துவது எளிய காரியமல்ல. இயக்கம் நடத்தும் இடத்தில் பரிபூரணமான அமைதி நிலவ வேண்டும். பலாத்காரத்தை ஜனங்கள் அடியோடு மறந்துவிட வேண்டும். என்னவிதமான கஷ்டம் நேர்ந்தாலும் சகித்துக்கொண்டு அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டும். அந்தப்பிரதேசத்தில் அஹிம்சை நிலவினால் மட்டும் போதாது. ஏதேனும் ஒரு இடத்தில் பொதுஜனச் சட்டமறுப்பு நடந்தபோதிலும் நாட்டில் மற்ற எல்லாப் பகுதிகளிலும் பரிபூரண அமைதி நிலவ வேண்டும். எங்கேயாவது ஒரு மூலையில் அஹிம்சைக்குப் பங்கம் நேரிட்டாலும் பொதுஜன சட்டமறுப்பு வெற்றியடையாது; இயக்கத்தை நடத்தவே முடியாது. ஆகையால் உங்களையெல்லாம் நான் ரொம்பவும் வேண்டிக் கொள்கிறேன். நான் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பித்து நடத்தும்போது நீங்களும் உடனே சட்டமறுப்பை ஆரம்பித்து விடவேண்டாம். பர்தோலியில் நடக்கும் இயக்கத்தைக் கவனித்து வாருங்கள். கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா மாகாணங்களையும் சட்ட மறுப்புக்குத் தயார் செய்யுங்கள். ஆனால் இயக்கத்தை ஆரம்பித்து விட வேண்டாம். நீங்கள் வசிக்கும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதி நிலவும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நான் வேண்டும் உதவி இதுதான். பர்தோலியின் அநுபவத்தைப் பார்த்துக்கொண்டு அடுத்த தாலூகாவில் இயக்கத்தை ஆரம்பிக்கலாம். இவ்விதமே ஒவ்வொரு பிரதேசமாக இயக்கத்தை விஸ்தரித்துக் கொண்டு போகலாம். ஜனங்களைச் சரிவரத் தயார்ப் படுத்தாமல் சட்ட மறுப்பை அவசரப்பட்டு ஆரம்பித்து எங்கேயாவது பலாத்காரச் செயல்கள் நிகழ்ந்து விட்டால் இயக்கம் படுதோல்வியடையும். இயக்கத்தை நிறுத்தவேண்டிய தாகிவிடும். பொதுஜனச் சட்ட மறுப்புக்கு இன்றியமையாத நிபந்தனை பொது ஜன அமைதி, ஆகையால் அவசரப்பட்டுச் சட்ட மறுப்பை ஆரம்பிக்க வேண்டாம். மாகாணங்களுக்குக் காங்கிரஸ் அந்த உரிமை கொடுத்திருந்த போதிலும் அதை உபயோகப்படுத்த வேண்டாம். பர்தோலியைக் கவனித்து வாருங்கள்!"


இப்படியெல்லாம் மகாத்மா காந்தி படித்துப் படித்துச் சொன்னார்; திருப்பித் திருப்பி எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்ட தலைவர்களிலே சிலர் "மகாத்மா எதற்காக இவ்வளவு பயப்படவேண்டும்?" என்று எண்ணினார்கள். அவ்விதமே சொன்னார்கள். சட்ட மறுப்புக்கு மகாத்மா விதித்த கடுமையான நிபந்தனைகளை ஆட்சேபித்தார்கள். ஆயினும் கடைசியில் ஒருவாறு ஒப்புக்கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.

ஆனால் காந்திமகானுடைய எச்சரிக்கை எவ்வளவு அவசியமானது என்று வெகு சீக்கிரத்திலேயே தெரிய வந்தது. மகாத்மா காந்தி தமது சொந்த இடமாகக் கருதிப் பெருமை கொண்டிருந்த பம்பாய் நகரத்தின் மூலமாகவே அந்தப் படிப்பினை வெளியாயிற்று. பயங்கரமான ரூபத்தில் வெளியாயிற்று.

முந்தைய 1920-ஆம் வருஷத்தின் மத்தியில் காந்தி மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது பிர்ரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினர் அதை அலட்சியம் செய்தனர். "முட்டாள்தனமான திட்டங்களுக்குள்ளே மிக முட்டாள்தனமான திட்டம்" என்று லார்டு செம்ஸ்போர்டு அதைக் குறிப் பிட்டார். ஆயினும் இங்கிலாந்தின் இராஜ தந்திரிகளுக்கு 'எது எப்படியாகுமோ' என்ற கவலை கொஞ்சம் இருந்தது. மாண்டகு-செம்ஸ்போர்டு திட்டத்தின்படி ஏற்பட்ட புதிய சட்டசபைகளை ஆரம்பித்து வைப்பதற்கு வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைப்பதென்று முதலில் உத்தேசித்திருந்ததை முன் ஜாக்கிரதையாக மாற்றிக் கொண்டார்கள். வேல்ஸ் இளவரசரைச் சங்கடமான நிலைமைக்கு உள்ளாக்க விரும்பாமல் அவருக்குப் பதிலாகக் கன்னாட் கோமகனை (டியூக் ஆப் கன்னாட்) அனுப்பினார்கள். கன்னாட் கோமகன் விஜயம் செய்து புதிய சட்ட சபைகளைத் திறந்து வைத்து "மறந்து விடுங்கள்; மன்னித்து விடுங்கள்; ஒத்துழையுங்கள்' என்ற பல்லவியையும் பாடிவிட்டுப் போனார்.

பிறகு ஒத்துழையாமை இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து பலம் பெற்று வந்தது. அந்த இயக்கம் பெரும் பொது ஜனக் கிளர்ச்சியாக மாறியது. கடைசியாக இப்போது பொது ஜனச் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்து அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்து விடுவதென்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் போட்டு விட்டார்கள்.

இத்தகைய நிலைமையில் புதிய வைஸ்ராய் லார்ட் ரெடிங் வேல்ஸ் இளவரசர் விஜயத்தை நடத்தி வைக்க உறுதிகொண்டார். வேல்ஸ் இளவரசர் வந்தால், அவருக்காக நடைபெறும் உபசாரக் களியாட்டங்களிலும் ஆடம்பர வைபவங்களிலும் பொது மக்கள் பிரமித்துப் போய்விடுவார்கள் என்றும், அதன் மூலம் காங்கிரஸில் வளர்ந்து வரும் செல்வாக்கைக் குலைத்து விடலாம் என்றும் லார்ட் ரெடிங் கருதினார். இந்திய மக்களின் பரம்பரைக் குணமான இராஜ விசுவாசம் மேலோங்கி மகாத்மாவின் சட்ட மறுப்பு இயக்கத்தை அமுக்கிவிடும் என்று லார்ட் ரெடிங்கும் அவருடைய சகாக்களும் பகற்கனவு கண்டார்கள். ஆகவே, வேல்ஸ் இளவரசரை அனுப்பி வைக்கும்படி ஆங்கில இராஜ தந்திரிகளை இந்திய அதிகார வர்க்கத்தினர் பிடிவாதமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

எனவே, 1921-ஆம் வருஷக் கடைசியில் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என்னும் நிச்சயமான செய்தி வெளியிடப்பட்டது. இதைக் காந்தி மகானும் மற்றக் காங்கிரஸ் தலைவர்களும் விரும்பவில்லை. வேல்ஸ் இளவரசரைக் கூட்டி வருவதற்கும் படாடோப வரவேற்புகளை நடத்துவதற்கும் இது சமயமல்ல என்று தலைவர்கள் கருதினார்கள். அதிகார வர்க்கத்தார் தங்களுடைய ஆட்சியைப் பலப் படுத்துவதற்கும் விடுதலை இயக்கத்தை ஒடுக்குவதற்கும் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தை உபயோகப் படுத்துவார்கள் என்று நினைத்தார்கள். எனவே இந்திய மக்கள் வேல்ஸ் இளவரசரின் விஜயத்தைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்று தீர்மானம் செய்து வெளியிட்டார்கள். நவம்பர் மாதம் 17-ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் பம்பாய்த் துறைமுகத்தில் வந்து இறங்குவதாக இருந்தது. அன்றையதினம் இந்தியா தேசமெங்கும் ஹர்த்தால் நடைபெறவேண்டும் என்றும் பிறகு இளவரசர் விஜயம் செய்யும் முக்கிய நகரங்களில் அன்றன்றைக்கு ஹர்த்தால் செய்யவேண்டும் என்றும் மக்களுக்குக் காங்கிரஸ் கட்டளையிட்டிருந்தது. இந்தக் கடமையை வற்புறுத்தி மகாத்மா காந்தி "எங் இந்தியா"வில் எழுதியிருந்ததோடு பல கூட்டங்களில் பேசியிருந்தார். "வேல்ஸ் இளவரசர் மீது தனிப்பட்ட முறையில் நமக்குக் கோபம் ஒன்றுமில்லை. அவரை அவமரியாதை செய்யும் எண்ணம் லவலேசமும் இல்லை. ஆனால் அன்னிய ஆட்சியின் சின்னமாக வேல்ஸ் இளவரசர் வருவதாலும், அதிகார வர்க்கத்தைப் பலப்படுத்துவதற்காக வருகிறபடி யாலும் அவருடைய வரவேற்புக் கொண்டாட்டங்களில் இந்திய மக்கள் கலந்துகொள்ள முடியாது. நம்முடைய அதிருப்தியை வெளியிடுவதற்காக ஹர்த்தால் அனுஷ்டிப்பதும் அவசியமாகிறது" என்று காந்தி மகான் வற்புறுத்தியிருந்தார்.

பம்பாய் நகரத்தில் காந்தி மகானுக்கு எல்லையற்ற செல்வாக்கு இருந்தது என்பதை முன்னமே பார்த்திருக்கிறோம். பம்பாய் வாசிகளில் பெரும்பாலோர் மகாத்மாவைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். அவருடைய வாக்கை வேதவாக்காக மதிக்கத் தயாராயிருந்தார்கள். ஆகையால் நவம்பர் 17-ஆம்தேதியன்று வேல்ஸ் இளவரசர் பம்பாயில் வந்து இறங்கும் தினத்தில் பரிபூரண ஹர்த்தால் நடத்துவதற்குப் பம்பாய் வாசிகள் ஆயத்தமாயிருந்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காந்தி மகாத்மாவின் கொள்கைகளைப் பம்பாய் வாசிகள் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்பது பின்னால் நடந்தவிபரீதங்களினால் வெளியாயிற்று

டில்லியிலிருந்து திரும்பி ஆமதாபத்துக்கு வந்த மகாத்மா நேரே பர்தோலி-ஆனந்த் தாலுகாக்களுக்குப் போய்ப்பரிசீலனை செய்ய உத்தேசித்திருந்தார். ஆனால் பம்பாய்த் தலைவர்கள் காந்திமகானுக்குச் செய்திமேல் செய்தி அனுப்பினார்கள்; தந்தி மேல் தந்தி அடித்தார்கள். நவம்பர் 17-ஆம் தேதி பம்பாய்க்கு வந்து விட்டுப் பிறகு பர்தோலிக்கு போகும்படி அவர்கள் மகாத்மாவை கேட்டுக் கொண்டார்கள். அந்த முக்கியமான தினத்தில் பம்பாய் நகரம் தீவிர கொந்தளிப்பை அடையுமாதலால் அன்றைக்கு மக்களுக்கு வழிகாட்டி நடத்த மகாத்மா பம்பாயில் இருக்க வேண்டும் என்று பம்பாய்த் தலைவர்கள் கோரினார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக் கிணங்கி மகாத்மாவும் பம்பாய்க்கு 17-ஆம் தேதி அதிகாலை வந்து சேர்ந்தார்.

17-ஆம் தேதி காலையில்தான் வேல்ஸ் இளவரசரும் பம்பாய்க் கடலோரத்தில் உள்ள ‘இந்தியாவின் வாசல்’ என்று அழைக்கப்படும் கோபுர மண்டபத்தில் கப்பலிலிருந்து இறங்கினார். இளவரசரை வரவேற்பதற்காகப் பிரமாதமான ஆடம்பர ஏற்பாடுகளை அதிகார வர்க்கத்தார் செய்திருந்தார்கள். இது காரணமாக ஏற்படக்கூடிய ஒரு விளைவைப் பம்பாய்க்காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்தார்கள். அதாவது வேல்ஸ் இளவரசர் இறங்கும் தினத்தில் ஹர்த்தாலும் நடப்பதால் வேலையில்லாத ஜனங்கள் வேடிக்கை பார்க்கும். ஆகையால் இளவரசர் இறங்குமிடத்துக்கு வந்து கூட்டம் போடக்கூடும். அப்படியானால், ஹர்த்தாலின் நோக்கம் நிறைவேறாமற் போவதோடு கோபங்கொண்ட ஜனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் தகராறுகள் ஏற்பட்டு விடக்கூடும். இம்மாதிரி யெல்லம் நடந்து விடக்கூடாது என்பதற்காக, பம்மாய்த் தலைவர்கள் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். இளவரசர் இறங்கும் இடத்திற்கு வெகு தூரத்தில் பம்பாய் நகரின் இன்னொரு எல்லையில் அதேசமயம் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்படு செய்திருந்தார்கள். எல்பின்ஸ்டன் ஆலையை யொட்டியிருந்த விஸ்தாரமான மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. அங்கு மகாத்மா காந்தி தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. ஆகையால் லட்சக் கணக்கான ஜனங்கள் அங்கே கூடி விட்டார்கள். கண்ணுக் கெட்டிய தூரம் அரே தலை மயமாகக் காணப்பட்ட அந்த ஜன சமுத்திரத்தின் மத்தியில் மேடைமீது நின்று மகாத்மா பேசினார். அஹிம்சையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றித்தான் முக்கியமாகப் பேசினார். "சீக்கிரத்தில் பர்தோலியில் பொதுஜனச் சட்டமறுப்பை ஆரம்பிக்கப் போகிறேன். அதன் பயனாகச் சர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும். ராணுவத்தை ஏவி ஜனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யும்படியும் சொல்லலாம். என்ன நடந்தாலும் சரி, ஜனங்கள் பொறுமையாயிருக்கவேண்டும். எவ்வளவு கோபமூட்டும் காரியம் நடந்தாலும் ஜனங்கள் பலாத்காரத்தில் இறங்கக் கூடாது. பம்பாய்வாசிகளை நான் ரொம்பவும் கேட்டுக் கொள்வது இதுதான்!" என்று காந்திஜி வேண்டிக் கொண்டார். அந்தோ! மகாத்மா இவ்வளவு உருக்கமாக வேண்டிக்கொண்ட அரைமணி நேரத்துக்குள்ளே பொது மக்களின் உற்சாகம் எல்லை கடந்துவிட்டது. வெண்ணெய் திரளும் சமயத்தில் தாழி உடைவதுபோன்ற துயரமான சம்பவங்கள் பம்பாயில் ஆரம்பமாகி விட்டன!
-----------------------------------------------------------
( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக