சனி, 16 ஜூன், 2018

1095. காந்தி -31

25. இதய தாபம்
கல்கி

கல்கி’யின் ‘மாந்தருக்குள் ஒரு தெய்வம்’ ( பகுதி 2 )என்ற நூலில் வந்த 25-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் .  [ இந்தத் தொடர் முடிவு பெறவில்லை. நூலில் 41 அத்தியாயங்களே வந்தன ]
===
முழத்துண்டு விரதம் கொண்ட காந்தி மகான் மதுரையிலிருந்து திருநெல்வேலிக்குப் போனார். காந்திஜியின் விரதத்தைப் பற்றிய செய்தி அவருக்கு முன்னாலேயே திருநெல்வேலிக்குச் சென்று விட்டது. அதை அறிந்த திருநெல்வேலி மக்கள் பக்தி பரவசமாயிருந்தார்கள். காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களைக் கட்டுக்குள்ளே வைப்பதற்குப் பெரு முயற்சி செய்தார்கள். ஆகையால் பெருந் திரளான மக்கள் கூடியிருந்தும் பொதுக் கூட்டத்தில் அமைதியும் நிசப்தமும் நிலவியது. இதைக் குறித்துக் காந்திஜி திருநெல்வேலி ஜனங்களைப் பெரிதும் பாராட்டினார். “இந்தமாதிரி ஒழுங்கும் கட்டுப்பாடும் இந்தியா தேசமெங்கும் நிலை நாட்டப் பட்டு விட்டல், நம்முடைய இயக்கம் வெற்றி அடைவது பற்றி எனக்கு யாதொரு சந்தேகமும் இல்லை” என்று மகாத்மா கூறினார். பின்னர் இராட்டையின் தத்துவத்தைப் பற்றித் தம்முடைய கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறினார்.

காந்திஜி ஒரு ஊருக்குப்போய் ஜாகையில் இறங்கியவுடனே அவரைப் பார்ப்பதற்கு அந்த ஊர்ப் பிரமுகர்கள் பலர் வருவது வழக்கம். அப்படி வருகிறவர்கள் எல்லாரும் காந்திஜியிடம் பக்தி கொண்டவர்கள் என்றோ அவருடைய போதனைகளைக் கடைப்பிடிக்கிறவர்கள் என்றோ சொல்ல முடியாது. “கந்திஜியைப் பார்த்துப் பேசினேன்” என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதற்காகவே பலர் வந்து சேர்வார்கள். இப்படிப்பட்ட வீண் பெருமைக்காரர்கள் வந்து மகாத்மாவைப் பார்த்துப் பேசுவதற்குத் திருநெல்வேலியில் ஒரு தடை ஏற்பட்டது.

மௌலானா ஆஸாத் ஸோபானி காந்திஜியுடன் பிரயாணம் செய்தார் அல்லவா? காந்திஜி முழத்துண்டு விரதம் கொண்டது பற்றி மதுரையிலிருந்து திருநெல்வேலி போகும்போது மௌலானா ஆஸாத் யோசனை செய்தார். இஸ்லாமிய மதக் கொள்கையின்படி இன்றியமையாத உடையை மட்டும் அணிந்து கொண்டு மற்றதை யெல்லாம் அவரும் புறக் கணித்தார். இடுப்பில் லுங்கியும் மேலே 'வெயிஸ்ட் கோட்"டும் அணிந்துகொண்டு அசல் முஸ்லிம் 'பக்கிரி'யைப் போல் தோற்றம் கொண்டார். திருநெல்வேலியில் காந்திஜி தங்கிய ஜாகையில், அவர் தங்கியிருந்த அறைக்கு வெளிப்புறத்து அறையில் இவர் உட்கார்ந்து கொண்டார். மகாத்மாவைப் பார்க்க வருகிறவர்களிடம், "உங்கள் உடம்பின் மேல் உள்ள விதேசித் துணிகளைக் இங்கே களைந்து எறிந்துவிட்டு உள்ளே மகாத்மாவைப் பார்க்கப் போங்கள்!" என்று சொன்னார்.

வந்தவர்களில் சிலர் மனப்பூர்வமாக விதேசித் துணிகளைக் கழற்றிக் கொடுத்தார்கள். ஒரு சிலர் வேறு வழியில்லாத படியால் மனமின்றிக் கொடுத்தார்கள். இன்னும் சிலர் விதேசித் துணிகளைக் கொடுக்க மனமில்லாமல் "மகாத்மாவைப் பார்க்கவேண்டாம்" என்று திரும்பி ஓடியே போய்விட்டார்கள். இவ்வாறு வீணர்கள் வந்து மகாத்மாவின் ஓய்வைக் கெடுப்பதற்கு ஒரு முட்டுக்கட்டை திருநெல்வேலியில் ஏற்பட்டது.

விதேசித் துணிகளைத் தியாகம் செய்யத் துணிந்து காந்திஜியைத் திருநெல்வேலியில் வந்து பார்த்தவர்களில் ஒருவர் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னை மாகாணத்தில் தீண்டா வகுப்பார் அநுபவிக்கும் இன்னல்களைப்பற்றி மகாத்மாவிடம் எடுத்துச் சொன்னார். தீண்டாதார் ஹிந்துக்களா யிருந்த போதிலும் அவர்கள் ஹிந்து ஆலயங்களில் விடப்படுவதில்லை யென்ற அநீதியைப் பற்றி உருக்கமாகக் கூறினார். இந்த அநீதியைப் போக்குவதற்காகத் திருவாங்கூரில் சில சீர்திருத்த வாதிகள் ஆலயப் பிரவேச இயக்கம் ஆரம்பிக்க விரும்புவதாவும் அவர் தெரிவித்தார்.

"என்ன மாதிரி இயக்கம் ஆரம்பிக்க உத்தேசம்?" என்று காந்திஜி கேட்டார். "முக்கியமான கோவில் ஒன்றில் உற்சவம் நடக்கப் போகிறது. அச்சமயம் ஒரு பெரிய தீண்டார் கும்பலை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் பிரவேசிப்போம். அதை அரசாங்க அதிகாரிகளும் மற்ற ஹிந்துக்களும் தடுத்தாலும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. பலவந்தமாகப் பிரவேசித்தே தீர்வோம்" என்றார் வந்தவர்.

"கலகம் நேர்ந்தால்?" என்று மகாத்மா கேட்டார். "கலகம் நேர்ந்தாலும் நேரட்டும் அதற்காக நாம் என்ன செய்வது?" என்றார் வந்த மனிதர். அது சரியான மனோபாவம் அல்ல என்பதை மகாத்மா காந்தி அவருக்கு எடுத்துக்காட்டினார்.

"தீண்டாமை பெரிய அநீதிதான். ஹிந்துக்களில் ஒரு பகுதியாரை ஆலயங்களில் விடுவதில்லை என்பது பெருங்கொடுமைதான். ஆனால் அநீதியையும் கொடுமையையும் பலாத்காரத்தினால் போக்க முடியாது. தீண்டாமை போக வேண்டுமானால் சாதி ஹிந்துக்களின் மனம் மாற வேண்டும். பலாத்காரத்தினால் சாதி ஹிந்துக்களின் மனதை மாற்ற முடியாது. குரோதமும் துவே ஷமும் அதிகமாகும். ஆகையால் ஆலயங்களுக்குள் போவதாயிருந்தால், இரண்டு பேர் அல்லது மூன்று பேராகப் போங்கள். பலாத்காரத்தைக் கையாள வேண்டாம். அதிகாரிகள் சிறைக்கு அனுப்பினால் செல்லுங்கள் இதுதான் சரியான முறை. இப்போது நான் இந்தியாவின் விடுதலையைக் கருதி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் தேச விடுதலை இயக்கம் முடிவடைந்த பிறகு நானே ஆலயப் பிரவேச இயக்கத்தையும் முன்னின்று நடத்துவேன்!" என்றார் காந்திமகான்.


தீண்டாமையின் கொடுமையைப் பற்றி ஏற்கனவே மகாத்மாவுக்குத் தெரிந்துதானிருந்தது. தீண்டாமை விலக்கைக் காங்கிரஸ் திட்டங்களில் ஒன்றாகச் சேர்த்திருந்தார். ஆயினும் மேற்படி சம்பாஷணையின் பயனாக மகாத்மாவின் மனம் தீண்டாமை விலக்குப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியது. பிற்பாடு மகாத்மா காந்தி பேசிய இடங்களில் எல்லாம் தீண்டாமை விலக்கைப் பற்றியும் அதிகமாக வற்புறுத்திப் பேசலானார்.

பின்னால் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி வைக்க நேர்ந்தபோது, காந்திஜி தீண்டாமை விலக்கிலும் ஆலயப் பிரவேச இயக்கத்திலும் பூரணமாகக் கவனம் செலுத்தியதை நாம் அறிவோம் அல்லவா? காந்தி மகாத்மாவின் பெரு முயற்சியினால் ஹிந்து சமூக்துக்கு ஏற்பட்டிருந்த தீண்டாமை என்னும் நோய் நம்முடைய காலத்திலேயே தொலைந்து ஒழிந்து போனதைப் பார்த்தோம்.

திருநெல்வேலியிலிருந்து மகாத்மா திரும்பி மதுரை- திருச்சி வழியாக ஈரோட்டுக்கு வந்தார். ஈரோட்டில் அச்சமயம் சிறந்த காங்கிரஸ் தலைவராக விளங்கிய ஸ்ரீ ஈ.வே. இராமசாமி நாயக்கர் அவர்களின் இல்லத்தில் தங்கினார். ஈரோட்டில் சிற்றாற்றாங்கறையில் ஒரு விசாலமான ஆலமரத்தின் அடியில் பொதுக்கூட்டம் மிக அமைதியாக நடந்தது. பல சமூகங்களின் சார்பாக வேலைப்பாடு அமைந்த வெள்ளிப் பேழைகளில் உபசாரப் பத்திரங்கள் மகாத்மாவுக்கு அளிக்கப்பட்டன. வெள்ளிப் பெட்டிகளையெல்லாம் பொதுக்கூட்டத்தில் ஏலம் போட்டுக் கிடைத்த பணம் திலகர் சுயராஜ்ய நிதியில் சேர்க்கப் பட்டது. மகாத்மாவுக்கு எங்கே எந்த விதமான பரிசுப் பொருள் கிடைத்தாலும் அங்கேயே ஏலம் போட்டு ஏதேனும் ஒரு பொது நிதியில் சேர்த்துவிடுவது வழக்கம்.

பொது நிதிகள் சேர்ப்பதில் மகாத்மாவுக்கு இணையான ஆற்றல் வாயந்தவர் யாருமே கிடையாது. அப்போதெல்லாம் பல பெண்மணிகள் மகாத்மாவை தரிசிக்கப் பக்தியுடன் வருவார்கள். தமிழ்நாட்டுப் பெண்மணிகள் நிறைய நகைகள் அணிந்து கொண்டிருப்பது வழக்கமல்லவா? தம்மைப் பார்க்கவரும் பெண்மணிகளைப் பார்த்து "இந்த நகைகளை எதற்காகச் சுமக்கிறீர்கள்? என்னிடம் கழற்றிக் கொடுத்து விடுங்கள். நல்ல காரியத்துக்குப் பயன் படுத்துகிறேன்" என்று காந்திஜி கூசாமல் கேட்டு விடுவார். இந்த வழக்கத்தை அறிந்த பிறகு பெண்மணிகள் மகாத்மாவின் அருகில் போய் அவரைத் தரிசித்துப் பேச வேண்டும் என்ரு ஆசைப்படுவது குறைந்து போயிற்று.

ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் போய்ப் பிறகு காந்திஜி சேலத்துக்குப் போன போது ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் முன்னணித் தலைவர்களில் ஒருவராயிருந்தார். அவர் தமது குடும்பத்துடன் மகாத்மாவைப் பார்ப்பதற்கு வந்தார். டாக்டர் நாயுடுவின் குமாரி, ஏழு வயதுப் பெண். கையில் பொன் வளையல்கள் அணிந்திருந்தாள். மகாத்மாஜி அதைப் பார்தததும் "இந்த வளையல்கள் உனக்கு என்னத்திற்கு? எனக்குக் கொடுத்துவிடு!" என்றார். மகாத்மா கூறியதை ஸ்ரீ நாயுடு தமிழில் குழந்தைக்குச் சொன்னார். குழந்தை உடனே வளையல்களைக் கழற்றிக் கொடுத்து விட்டாள். "நான் விளையாட்டாகக் கேட்டேன். அம்மா! நீயே வைத்துக்கொள்!" என்று மகாத்மா பலதடவை சொல்லியும் அந்தக் குழந்தை கேட்கவில்லை. மகாத்மாவிடமிருந்து வளையல்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.

நாகபுரி காங்கிரஸின் அக்கிராசனர் சேலம் ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் அல்லவா நியாயமாக, அந்த வருஷத்தில்காங்கிரஸ் வேலைகள் எல்லாம் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நடைபெறவேண்டும். அதற்குப் பதிலாக மகாத்மாவிடமும் அவருடைய சகாக்களிடமும் காங்கிரஸ் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு வந்துவிட்டது. எனினும், பெருந் தன்மைமிக்க மகாத்மா சேலத்தில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பினார்.

சேலம் நகர சபையார் காந்தி மகாத்மாவுக்கு மிக வேலைப் பாடமைந்த சந்தன மரப்பெட்டி ஒன்றில் உபசாரப் பத்திரம் வைத்துக்கொடுத்தார்கள். அந்தச் சந்தன மரப்பெட்டி அப்போது சென்னைக் கவர்னராக வந்திருந்த லார்ட் வில்லிங்டனுக்காக செய்யப்பட்டது. ஆனால் அதை வில்லிங்டனுக்கு கொடுப்பதற்குள்ளே ஒத்துழையாமை இயக்கம் தோன்றிவிட்டது! தமிழ் நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்துக்குத் தலைமை வகித்த ஸ்ரீ சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் சேலத்தைச் சேர்ந்தவர். சேலம் ஜில்லா அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்றது. மற்ற எந்தத் தமிழ் நாட்டு நகரத்தைக்காட்டிலும் சேலத்தில் அதிகமான வக்கீல்கள் தங்கள் தொழிலை நிறுத்தி மகாத்மாவின் இயக்கத்தில் சேர்ந்தார்கள். அப்படிப்பட்ட சேலத்தில் நகரசபையும் தேசீய மனப்பான்மையும் கொண்டிருந்தது. கவர்னருக்கு வரவேற்பு அளிக்கும் உத்தேசத்தை அடியோடு கைவிட்டுச் சேலம் நகர சபையார் கவர்னருக்காகத் தயாரித்திருந்த சந்தனப் பெட்டியை மகாத்தமா காந்திக்குக் கொடுத்ததில் வியப்பில்லையல்லவா?

லார்டு வில்லிங்டனுக்கு அந்தப் பெட்டியைக் கொடுத் திருந்தால் லேடி வில்லிங்டன் இந்தியாவிலிருந்து கொண்டு போன எத்தனையோ விலையுயர்ந்த பொருள்களுடன் அதுவும் இங்கிலந்துக்குப் போயிருக்கும். ஆனால் மகாத்த்மாவுக்குக் கொடுத்த பெட்டி சேலத்திலேயே ஏலத்துக்கு விடப்பட்டு விட்டது.

தமக்காகச் செய்த பெட்டியை மகாத்மா பெற்றுக் கொண்டார் என்ற விவரம் லார்டு வில்லிங்டனுக்குத் தெரியாமலிருக்க முடியுமா? தெரிந்துதானிருக்கும். அதை அவர் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்தாரா என்பது நமக்குத் தெரியாது.

ஆனால் ஒன்று தெரியும். லார்டு இர்வின் 1931-ஆம் வருஷக் கடைசியில் வைஸராய் பதவியிலிருந்து விலகி இங்கிலாந்து போனதும் லார்டு வில்லிங்டன் அந்தப் பதவிக்கு வந்து சேர்ந்தார். லார்டு வில்லிங்டன் செய்த முதற்காரியம் லண்டன் வட்டமேஜை மகாநாட்டிலிருந்து திரும்பி வந்த மகாத்மா காந்தியைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியதுதான்! மகாத்மா காந்திக்கு பேட்டி கொடுக்கவும் லார்டு வில்லிங்டன் இணங்க வில்லை. “சட்ட மறுப்பைக் கைவிட்டுச் சரணாகதி அடைந்தால் தான் பேட்டி கொடுக்கமுடியும” என்றார். ‘அதற்கு இஷ்டம் இல்லாவிட்டால் போங்கள் சிறைக்கு என்றார். இதைப்பற்றிப் பின்னால் விவரமாகப் பார்ப்போம்.

சேலத்தில் காங்கிரஸ் ஊழியர்கள் பலர் மகாத்மாவைப் பேட்டி கண்டார்கள். மேலே நடக்கவேண்டிய காரியங்களைப் பற்றிக் கேட்டார்கள். "இங்கிருந்து நேரே நான் குஜராத்துக்குப் போகிறேன். அடுத்த மூன்று மாதமும் குஜராத்தில் தான் இருப்பேன். சாத்வீகச் சட்ட மறுப்புப் போரை ஆரம்பிப்பதற்குக் குஜராத்தைத் தயார் செய்வேன்!" என்று மகாத்மா காந்தி சேலம் காங்கிரஸ் ஊழியர்களிடம் கூறினார்.

"ஒரு வருஷத்தில் சுயராஜ்யம்" என்று மகாத்மா கூறினார் அல்லவா? அந்தத் தவணை நெருங்கி வந்து கொண்டிருந்தது. அது நெருங்க நெருங்க மகாத்மாவின் இதய தாபமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. வேறு எந்தக் காரியத்திலும் அவருடைய மனது செல்லவில்லை. சுயராஜ்யத்துக்காக நடத்த வேண்டிய இறுதிப் போரைப் பற்றியே மகாத்மா காந்திஜியின் உள்ளம் சிந்திக்கத் தொடங்கியது.
-----------------------------------------------------------


( தொடரும்)


தொடர்புள்ள பதிவுகள்:

மகாத்மா காந்தி
'கல்கி’ கட்டுரைகள்

[  நன்றி: : http://www.projectmadurai.org/  ]

கருத்துகள் இல்லை: