திங்கள், 18 ஜூன், 2018

1097. நா.பார்த்தசாரதி - 6

நா.பா. எழுத்துக்களில் தனிமனித அறம்
தேவகாந்தன் 
[ நன்றி; அகில் ] 
(சென்ற ஆண்டு (28-10-2017) கலாநிதி ஏ.கோவிந்தராஜு சிறப்புரையாளராகக் கலந்துகொண்ட ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் மாதாந்த இலக்கியக் கூட்டத்தில் நான் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. நடையிலும் கருத்திலும் பெரிதான மாற்றமெதையும் நான் இதில் செய்துவிடவில்லை. தகவல்கள் சற்று கூடியிருக்கின்றன --- தேவகாந்தன் --)

'நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களில் தனிமனித அறம்' என்ற தலைப்பில் நான் பேசவிருந்தாலும் அவரது நாவல்களை முன்வைத்தே என் கருத்துக்களை பதிவாக்க விரும்புகிறேன். இதற்கு தமிழ் நாவலின் தோற்றத்தையும், அது எவ்வாறு ஒரு இரட்டைத் தடத்தில் ஆரம்பம் முதல்  வளர்ந்து வந்ததென்பதையும் காணவேண்டி இருக்கிறது.

1879இல் வேதநாயகம்பிள்ளை எழுதிய 'பிரதாபமுதலியார் சரித்திரம்', 1896இல் வெளிவந்த ராஜமையரின் 'கமலாம்பாள் சரித்திரம்' இரண்டையும், இவற்றிற்கிடையே பதினேழாண்டுக் கால இடைவெளி இருக்கிறபோதும், இரட்டைத் தட ஆரம்பத்தின் உதாரணமாகக் கொள்ளலாமென நம்புகிறேன். வேதநாயகம்பிள்ளையின் நாவல் டொன் குவிசோட்டை அடியாகக்கொண்ட வீரப்பிரதாப, அற விழுமியங்களை உள்ளடக்கிய கதை கூறல் கலையை முதன்மைப்படுத்தியது எனவும், ராஜமையரின் எழுத்து கலையை முதன்மைப்படுத்தாமல் அறவிழுமியங்களை முதன்மைப்படுத்தியதாகவும் இந்த இரண்டு நாவல்களையும்பற்றிய ஆய்வாளர்களின் கூற்றுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இதற்கான ஆதாரங்கள் அந்தந்த நாவல்களின் முன்னுரையில் அந்தந்த ஆசிரியர்களாலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. வேதநாயகம்பிள்ளை, 'தமிழில் இம்மாதிரி உரைநடை நவீனம் பொதுமக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்த நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன்' என்கிறார். ரசம் போதனை இந்த இரண்டில் தான் முதன்மையாகப் பிரதானப்படுத்துவது ரஸம் என்பதே ஆசிரியரது திட்டமாக இருக்கிறதென்பது புரியக்கூடியதாயிருக்கிறது. ராஜமையர் இந்த இடத்தில் ஒழுக்கத்தை முதன்மைப்படுத்துவது ஐயமின்றித் தெரிகிறது. அ.மாதவையாவின் 'பத்மாவதி சரித்திரம்' வேதநாயகம்பிள்ளையின் பாதையை அடியொற்றி ரஸனையை முதன்மையாக்கி இதே காலப்பகுதியிலே வெளிவந்தது. இதையே நாவல் இலக்கிய வரலாற்றில் இரண்டு பாதைகளின் ஆரம்பமாகக் கொள்ளமுடியும்.

இன்னொரு பாதை வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு போன்றவர்களின் மர்ம, துப்பறியும் கதைகளின் மூலமாக துளிர்க்கிறது. மர்மங்களையும் அதை விடுவிக்கும் உத்திகளையும் கொண்ட இவ்வகையான எழுத்துமுறை வெகுஜன வாசகப் பரப்பை அக்காலத்தில் பெருமளவு ஈர்த்திருந்தமை மெய்யே. ஆனால் இவ்வகை மலின எழுத்தை சீரிய எழுத்து தன் வகைமைக்குள் அடங்க அனுமதிக்கவேயில்லை. இவையெழுந்த காலப்பகுதியை இருண்டகாலமென இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.
இந்த வாசகப் பரப்பை மையப்படுத்திய பாதையிலிருந்துதான் மேலும் சீர்மையடைந்த ஒரு வடிவில் வாசகர்களைக் கவர்வதற்கான சரித்திர தொடர்கதை முயற்சிகள் தமிழிலக்கிய உலகில் உருவாகின்றன. இவற்றின் வசீகரிப்பினை இவற்றோடு இணைந்து வந்த வர்ணச் சித்திரங்கள் செய்தன. குடும்ப நாவல்களுக்கான கதியும் இதேயாகிறது. காதலும் வீரமும் பொங்கும் ஓவியங்களை அதிகமும் கதைகளில் ஊடாடவிட்டதான காலம் இதுபோல் பிறிதில்லை. இவை பெரும்பாலும் வேதநாயகம்பிள்ளையின் ரஸனையாகக் கதை சொல்லல் என்ற வகைமையை அடியொட்டியும், சேர் வால்டர் ஸ்கொட்டின் கதைக் கலையைப் பின்பற்றியும் தனி இலக்கிய வகையாக வடிவங்கொள்கின்றன.
இதற்கான சமூக அரசியல் காரணங்கள் முக்கியமானவை. காலம் அவற்றிற்குத் தக அமைந்து இவ்வகை எழுத்துக்களின் வரவை துரிதமாக்கியது. இக் காலத்தின் முக்கியமான உந்துவிசைகளாக கிறிஸ்தோபர் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலினதும் (1875), சுந்தரம்பிள்ளையின் மனோன்மணிய (1891)த்தின் வருகையும் கிளர்த்திய பழந்தமிழ் என்ற கருத்தாக்கம் திராவிட கோஷமாக, அகண்ட தமிழக கோஷமாக முன்னெழுந்து அரசியல் இலக்கியப் புலங்களை வெகுவாக ஆகர்ஷித்தும், ஆதிக்கம் செலுத்தியும் இருந்ததென்பது இங்கே கவனிக்கப்படவேண்டும்.

நீடு துயிலில் கிடந்த தமிழகத்தில் இது ஒரு புத்துணர்ச்சியை எழுப்பியது. தமிழ்மொழியினதும் தமிழகத்தினதும் தொன்மையும் பெருமையும் இவற்றால் வீறுபெற்றன. பண்டைத் தமிழகத்தின் அமைப்பும், அவற்றைக் கட்டியெழுப்பிய அரசர்களின் வீரதீரங்களும் எழுத்துக் கனவுகளாய் விழித்தெழுந்தன. மூடுண்டு கிடந்த வரலாற்றுப் பக்கங்கள் கற்பனையில் உருக்கொள்ள ஆரம்பித்தன. அவை தொடர்கதை வாகனங்களில் ஏறி பவனிவந்துகொண்டு இருந்தன. ஶ்ரீவேணுகோபாலன், ஜெகசிற்பியன், அரு.ராமநாதன், ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி), அகிலன், கோவி.மணிசேகரன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யனென தொடர்ந்து வெகுஜனப் பரப்பை தம் எழுத்தால் ஆட்சிசெய்த எழுத்தாளர்கள் உருவானது இவ்விதம்தான் தமிழ்நாட்டில் நிகழ்ந்தது.

திராவிட எழுச்சி தமிழ் உரைநடையிலும் பாரிய தாக்கத்தை விளைத்தது. அது இலக்கியத்தின் குரல்வளையை நெருக்கிக்கொண்டு இருந்ததென்பதை உணரவும் வெகுகாலம் செல்லவேண்டி இருந்தது. ஒருவகையில் இந்த வகை எழுத்துமுறையால்  கவரப்பட்டவராகவும், இந்த திராவிட வட்டத்துக்குள் இல்லாத படைப்பாளியாகயும் சாண்டில்யனைக் கொள்ள முடியும்.

இந்த வளர்ச்சியின் பெறுபேறுகளை அடைந்துகொண்டு இருந்தபொழுதில்  இந்த இரண்டு பாதைகளுக்குள் அடங்காத வேறு சில பாதைகளும் காலத்தின் கதியில் உருக்காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று ப.சிங்காரத்தின் பாதை. 'கடலுக்கு அப்பால்' (1959), 'புயலிலே ஒரு தோணி' (1972) ஆகிய நாவல்கள் மூலம் ரசனைக்கப்பாலும் அற விழுமியங்களுக்கப்பாலும் யதார்த்தவகைக் கதை சொல்லல் முறையாக இது உருவாகிறது. இருந்தபோதும் வாசகர் ஈர்ப்பு, இலக்கிய அந்தஸ்து ஆகிய தளங்களில் இது செல்வாக்கு எதனையும் பெரிதாகச் செலுத்திவிடவில்லை. தன் படைப்புகளை உணர்வதற்கான காலம் வரும்வரை ப.சிங்காரம் காத்திருக்கவேண்டியவராயே இருந்தார்.

கலையை முதன்மைப்படுத்திய பாதை இவ்வண்ணம் வீறுகொண்டெழுந்த வேளையில், கருத்தை முதன்மைப்படுத்தியும், கருதுகோள்களை முன்னிலைப்படுத்தியுமான எழுத்துக்களும் உருவாகியிருந்தன. இவை முன்னர் உருவாகியிருந்த அறத்தை முதன்மைப்படுத்திய எழுத்துக்களின் நேரடித் தொடர்ச்சியாக இல்லையெனினும், அது நடந்துவந்த போக்கில் தம் நடையைத் தொடங்கின. தன் கொள்கையைப் பிரச்சாரிக்கும் எழுத்தாக இடதுசாரி எழுத்துக்கள் இருந்தாலும், ஒரு வட்டத்திலெனினும் சிறப்பாக அவை கவனம் பெற்றன. மார்க்சிய யதார்த்தவாத இலக்கியமென அடையாளப்படுத்தப்பட்ட இது தனக்கான விமர்சன முறைமையையும் வகுத்துக்கொண்டது.

இவ்வாறாக தமிழ் உரைநடையின் புனைவிலக்கியப் பரப்பில் வெகுஜன, தீவிர இலக்கியமென்ற தற்கால வகைமைப்பாடு உருவாகியது. இதற்கு மணிக்கொடியும், எழுத்தும், சரஸ்வதியும் மற்றும் சந்திரோதயம், பிரசண்ட விகடன், ஆனந்த விகடன், குமுதம், கல்கி, கலைமகள் ஆகிய சஞ்சிகைகளின் தோற்றம் பெரிதும் உந்துதலை அளித்தது. பத்திரிகைத் துறையின் அபரிமிதமான வளர்ச்சியை இலவசக் கல்வியினால் உருவாகிய மத்தியதர வர்க்கம் உந்தித் தள்ளியபோது இவ்வகையான வெகுஜன எழுத்துக்களின் பெருக்கம் மிகுதியாகிற்று. அது இன்னுமின்னுமென தனக்கான எழுத்துக்கான யானைப்பசி பிடித்து அலைந்தது.
ஆனாலும் தீவிர சஞ்சிகைகளை இலக்காக்கிய எழுத்து தன் வழியில் இலக்கியத்தை முதன்மைப்படுத்தி தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. இடதுசாரி எழுத்துக்கள் தம் கற்பனை வற்ட்சியால் இலக்கியத் தன்மையை இழந்திருந்ததை அதனோடு கூட பயணித்துக்கொண்டிருந்த எழுத்து வகைமை கண்டிக்கச் செய்தமை தவிர்க்கமுடியாத தர நிர்ணய விமர்சனமாக உருவெடுக்கிறது. எனினும் வெகுஜன எழுத்துடனான யுத்தத்தை இவை ஒன்றாகவே புரிந்தன.

இவ்வாறு நாவலிலக்கியத்தின் இருப்பு இரு வழிப் பாதையில் இறுக்கமடைந்தது.

இக்காலகட்டத்துக்குரிய தொடர்கதைகளை Historical Romance (அற்புத வரலாற்றுப் புதினம்) என வகைப்படுத்த முடியுமாயிருக்கையில், இவற்றினும் மேம்பட்டதும் வரலாற்றுக் கதையியலை முன்னிலைப்படுத்தியுமாக எழுந்த எழுத்தை Historical Novel(இயற்கை வரலாற்றுப் புதினம்) எனும் வகைப்பாட்டிற்குரியதாக காணமுடிந்திருந்தது. இந்த வரலாற்றுப் புதின வகைக்கு உதாரணமான பல அம்சங்களை  அரு.ராமநாதனின் 'வீரபாண்டியன் மனைவி'யில் கவனிக்கமுடிந்தது.
இந்த இரண்டு வகைமைக்குள்ளும், Historical Romance அற்புத வரலாற்றுப் புதின வகைமையின் வழியாகவே தன் ஆக்கங்களை வெளியிட்டார் நா.பா. இருந்தும் 'கல்கி', அகிலன், சாண்டில்யன், நா.பா. ஆகிய இம் முதன்மையான வெகுஜன எழுத்துப் படைப்பாளிகளிடையே நா.பா.வின் எழுத்துக்களை சற்று வித்தியாசமானவையாகக் கொள்ளமுடியும்.

சங்க இலக்கிய நயமும், கவித்துவமான உரைநடையும், அவற்றின்மூலம் அறத்தை வெகுவாக வற்புறுத்தியமையும் நா.பா.வின் எழுத்துக்களிலுள்ள தனித்துவமான அம்சங்களாக இருக்கின்றன.

நா.பா.வின் நாவல்களில் இரண்டு கட்டங்கள் உண்டு. ஒன்று, தீபம் இதழை அவர் தொடங்கு முன்பான 1965க்கு முற்பட்ட காலம். இரண்டு, அதற்குப் பிந்திய காலம்.

இந்த இரண்டிலுமே அறங்கள் வலுவாகப் பேசப்படினும், முதல் கட்டத்தில் நளினமும் சாத்வீகமும்கொண்ட பாத்திரங்கள்மூலம் அவர் கதையை நடத்தினாரென்றும், இரண்டாம் கட்டத்தில் நளினமற்றதும் சிறிது வன்முறைக்குத் தயாரானதுமான பாத்திரங்கள்மூலம் கதையை நடத்திச் சென்றாரென்றும் கொள்வது சுலபமாகவே கூடுகிறது.
சரித்திர மிகுபுனைவு நாவல்களில் தனக்கு பிடித்தவையாக 1) ராணி மங்கம்மா 2) மணிபல்லவம் 3) பொன்விலங்கு 4) சமுதாய வீதி ஆகிய நாவல்களைச் சொல்வார் ஜெயமோகன். எனக்கு சற்று இதற்கு மாறுபட்ட வரிசையில்  1) பாண்டிமாதேவி 2) மணிபல்லவம் 3) குறிஞ்சி மலர் ஆகிய நாவல்களைச் சொல்லமுடிகிறது. இவை நான் மேலே குறிப்பிட்டபடி 'தீப'த்துக்கு முந்திய காலகட்ட நாவல்களாகும். அறமும் சாத்வீகமும் இந் நாவல்களில் பதிவாகியமைபோல் வேறு படைப்பாளிகளின் நாவல்களில் பதிவாகவில்லையென்பது எனது கவனிப்பாக இருக்கிறது. சாத்வீகத்தின் அழுத்தத்திற்கு 'ஆத்மாவின் ராகங்கள்' நாவல் நல்லவொரு உதாரணமாக அமையக்கூடும்.

அறம் என்பது என்னவென்பதை தெளிவாக இங்கே காணவேண்டும். பண்டைய காலம்தொட்டே கொலை, களவு, பொய், கள்ளு, காமங்களை ஒதுக்கிய ஒழுக்கம் ஐந்தொழுக்கமெனப்பட்டது. ஐவகைச் சீலமென்பதும் இதுதான். 'ஐவகைச் சீலத்தமைதியும் காட்டி உய்வகை யிவைகொள்ளென்று உரவோன் அருளினன்' என்று மணிமேகலை இதைச் சொல்லும். இவற்றையே பிற்காலத்தில் ஆறுமுக நாவலரும் சைவ மதம் சார்ந்து இவற்றை பஞ்சமா பாதகங்கள் என்றார்.  அவரது சைவ வினாவிடையில் இது ஒரு தனிக் கேள்வியாகவே வரும்.

'கேள்வி: பஞ்ச மா பாதகங்கள் யாவை?
பதில்: கொலை, களவு, பொய், கள்ளு, காமம்' என்பதாக அது இருக்கும்.
தனிமனிதருக்கானவையாகவே இவை வகுக்கப்பட்டன. தனிமனிதரின்  கூட்டுருவாக்கத்தில் உருவாகும் சமூகத்தில் இந்த ஐந்து அறங்களில் கொலையானது புலால்மறுத்தலையே முதன்மையாகக் குறித்தது. பிராணி வதை அடுத்ததாக இடம்பிடித்தது. மற்றும்படியான யுத்த கால கொலை ஒரு போர்வீரனின் தர்மமாகும். எந்தக் காலத்து யுத்தத்திலும் முதியோர் பெண்கள் குழந்தைகள் நோயாளர் தவிர்ந்த யுத்த சன்னத்தர்களின் கொலை தர்மமாகக் கணிக்கப்பெற்றது. அது இன்றைய நாளிலும் பொதுசன குடியிருப்புகள், வைத்தியசாலைகள் தாக்குதல்களிலிருந்து தவிர்க்கப்படவேண்டுமென்ற உலக யுத்த விதிமுறைகளாக சர்வதேச, மனிதவுரிமைச் சங்கங்களால் வற்புறுத்தப்படுகின்றன
ஆனால் இந்த அறங்கள் வெறும் ஏட்டளவிலன்றி வாழ்வறமாக நீடிக்கவில்லையென்ற குறை பலபேரிடமும்தான் இருந்தது. அதை சிலபேரே இலக்கியங்கள் மூலம் வற்புறுத்த முயன்றார்கள். இதில் மு.வ., நா.பா. இருவருக்கும் முக்கியமான இடமுண்டு.

மு.வ. தன் எழுத்துக்களில் மிக வெளிப்படையாகவே தன் கருத்துக்களை பாத்திரங்களிலேற்றி உரையாடலாக முன்வைத்தவேளையில், நா.பா. அவற்றை தன் பாத்திரங்களின் நடைமுறை, வாழ்வியல் மூலமாக கட்டமைத்தார். இருந்தும் அவ்வப்பொழுதில் அந்த அளவை அவர் மீறிய தருணங்களும் உண்டு. அவரது நாவல்களின் கலைத்தன்மை குறைபாடடைந்ததற்கு இதுவுமொரு காரணமாக விமர்சகர்களால் கணிக்கப்பெறுகிறது. மேலும் அவரது நாவல்கள் யாவும் தொடர்கதைகளாக வெளிவந்ததில் தொடர்கதைக்குரிய அம்சங்கள் பலவற்றை அவை கொண்டுமிருந்தன. வாசக ஆர்வத்தைக் கிளறும்படியான அதிகார முடிப்புகள் இவற்றில் முதன்மையானது.
அறம் சார்ந்த விஷயத்தில் நா.பா.வின் முக்கியமான பதிவாக நான் கணிப்பது அவர் ஒரு ஆறாவது சீலமாக நெஞ்சின் உறுதியை – அநீதிக்கெதிராக கொதித்தெழும் பண்பை, மிக அழுத்தமாக வற்புறுத்தியதாகும். அதற்காக அவர் தம் படைப்பின் இலக்கியத் தன்மையை நசுக்கவும் தயங்கவில்லை. உண்மையைத் தேடி அலைந்துகொண்டிருந்த இளங்குமரனின் துணிவு, 'கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று \ அதனெதிர் கொள்ளேன் என்னல் அதனினும் உயர்ந்தன்று' என்ற சங்கப் பாடலுக்கு இலக்கணமாக விளங்கியது (மணிபல்லவம்). அதுபோலவே சத்தியமூர்த்தியின் அநீதிக்கும் பொய்மைக்கும் அஞ்சாத தன்மைக்கும் சான்றாக விளங்குகிறது (பொன்விலங்கு). 'நெற்றிக் கண்', 'நெஞ்சக் கனல்' போன்றவையும் ஒரு பத்திரிகையாளனின் அநீதிக்கெதிரான தார்மீக யுத்தத்தைப் பேசுவனதான். அறத்தை வலியுறுத்துகிற வேளை, அதற்கெதிரான அமைப்புகளின் மீதான யுத்தமும் அவசியமென்பதை நன்குணர்ந்தவராவே நா.பா. காணப்படுகிறார். அதனாலேயே ஒழுக்கம் அவரது நாவல்களில் ஓம்பப்பட்ட வேளையில், அதற்கான சூழமைவுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த மனத் தீரமுள்ள பாத்திரங்களையும் படைத்தார். அத் தீரம் ஒரு ஆறாவது சீலமாகவே கணிக்கத்தக்கது. பஞ்சசீலங்கள் தனிமனித அறமாக அமைகிறவேளையில், நா.பா.வின் இந்த ஆறாம் சீலம் அவற்றைக் காப்பதற்கான கவசமாக, சமூக அக்கறையின் பாற்பட்டதாக இருக்கிறது. நா.பா.வின் நாவல்களது முக்கியத்துவம் இங்கிருந்தே தொடங்குகிறது.
இதுவரை வெளிவந்துள்ள சிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட நேரும்வேளையில் நா.பா.வின் எந்த நாவலும் அதில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லையென்பதே எனது அபிப்பிராயமாகும். ஐம்பது நாவல்கள் அவ்வாறு தேர்வுசெய்யப்படுமாயின் அவற்றில் பாண்டிமாதேவிக்கு ஓரிடமிருக்க நிறைய வாய்ப்புண்டு. நூறு நாவல்கள் தேரப்படுமாயின் மணிபல்லவத்திற்கும் அதில் இடமிருக்கலாம். ஐம்பது வருஷங்களுக்கு நிறைந்த வாசிப்புச் சுகம்செய்த அந்த நாவல் இன்றைக்கு அந்தளவு சுகத்தைச் செய்யவில்லையென்பது சுய அனுபவம். அதற்கு வாசிப்பின் தளங்கள், இலக்கியம்பற்றிய புரிதல்கள் இன்று மாறியிருக்கின்றனவென்பது முக்கியமான காரணம். அது தவிர்க்கமுடியாமல் பல தொடர்கதை எழுத்தாளர்களினதும், இலக்கிய கர்த்தாக்களின் நாவல்களுக்கும் நேரக்கூடியதுதான். தமிழில் மட்டுமின்றி, எந்த மொழியிலும்கூட நேரக்கூடியது. அந்தளவுக்கு வாசிப்பு புனைவுத் தளங்களில் இன்று இலக்கியம் வேறொரு தளத்தைச் சென்றுசேர்ந்திருக்கிறது.


இப்போதும் மணிபல்லவத்தை தமிழில் குறிப்பிடக்கூடிய நாவலாகவே நான் காண்கிறேன். அது 'கல்கி'யின் சிவகாமியின் சபதத்துக்கு நிகரானது. மணிபல்லவம் சிலப்பதிகார காலத்தை கண்முன் கொண்டுவந்திருந்ததெனில், சிவகாமியின் சபதம் பல்லவர் காலத்து மாமல்லபுரத்தை முன்னிறுத்தியது. இவற்றின் சறுக்கல்கள் வீழ்ச்சிகளெல்லாம் இவற்றின் தொடர்கதைத் தன்மையினால் ஏற்பட்டவையென மெய்யாலுமே நான் நம்புகிறேன்.
ஆங்கிலத்திலும் மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளிலும் தோன்றிய ஆரம்ப கால நாவல்கள் தொடர்கதைகளாகவே வெளிவந்தன. ராஜமையரின் 'கமலாம்பாள் சரித்திரம்'கூட விவேக சிந்தாமணியில் தொடராக வந்த நாவல்தான். அறுபதுகளில் வெளிவந்த ஓ.வி.விஜயனின் 'கஸாக்கின் இதிகாசம்' தொடராகவே வந்தது. அது மலையாளத்தின் முக்கியமான நாவலாக இன்றும் திகழ்ந்துகொண்டு இருக்கிறது. அதுபோலத்தான் பல ஆங்கில நாவல்களும். தமிழிலும் ஜானகிராமன் போன்ற முக்கியமான படைப்பாளிகளின் நாவல்களும் அவ்வாறு தொடராக வெளிவந்திருக்கின்றன. அவற்றின் தரம் இன்றளவும் குறையாமலேதான் விமர்சகப் பார்வையில் இருந்துகொண்டு இருக்கின்றது. மற்றையவர்களின் தொடர்கள் ஏன் அந்தளவான இலக்கியக் கனதி பெறவில்லையென்பது யோசிக்கப்படவேண்டும்.

நா.பா.வின் அந்தளவு நளினமான எழுத்தில் அமைந்த அந்த நாவல்கள் ஒரு சீரிய செம்மையாக்க (Editing) த்துள் வரும்பொழுது அவ்வாறான இலக்கிய அந்தஸ்த்தை அடையலாமென எனக்கொரு நம்பிக்கை இருக்கிறது. தொடர்கதையாக வந்தவற்றை நூலுருவாக்கியபொழுது அவற்றில் எவ்வளவு செம்மையாக்கம் செய்யப்பட்டது என்பதுபற்றிய விபரம் அறியக்கிடைக்கவில்லை. அவ்வாறான முயற்சியெதுவும் நடந்திருப்பதற்கான சாத்தியத்தையும் இன்றைய வாசிப்பில் காணமுடியவில்லை. அவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுக்கும் ஆர்வம் என் மனத்தினடியில் இருந்துகொண்டிருக்கிறது சில பல காலமாக. அதற்கான காலம் கனிந்து வரவேண்டுமென்பதே என் காத்திருப்பாக இருக்கிறது.


தமிழிலக்கிய உலகில் தன் எழுத்து ஆளுமைமூலம் ஆறாம் சீலமொன்று கண்டு அறம் கூறவந்த நா.பா.வின் எழுத்துக்கள் தன் ஈர்ப்பினால் பல வாசகர்களைக் கொண்டிருந்தன என்பதும், பலபேரின் மனச்சாட்சியில் அறமென்ற விழுமியத்தை நிரந்தரமாகப் பதியவைப்பதிலும், பலரை வாழ்முறைக்கான மனிதர்களாக மீட்டெடுப்பதிலும் கணிசமான அளவு பங்காற்றியிருக்கிறது என்பதையும் மனங்கொள்வேண்டும். என்னிடத்திலுள்ள அவரது எழுத்தின் மேலான ஈர்ப்புக்கு ரசனையைவிடவும் இந்த அம்சம்தான் தூக்கலாய் இருந்ததோ? எனினும் அந்தளவில் அது நா.பா.வின் எழுத்துக்கான வெற்றியே. தனிமனிதரை, சமுதாயத்தை சரியான திசையில் மாற்றிச் செலுத்தும் எந்த எழுத்தும்கூட வெற்றிபெற்ற எழுத்துத்தான்.

[ நன்றி: தேவகாந்தன் ]
தொடர்புள்ள பதிவுகள்:

http://devakanthan.blogspot.com/

நா.பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக