வியாழன், 7 ஏப்ரல், 2022

2073. சிலம்பொலி செல்லப்பன் -1

சிலம்பொலி செல்லப்பன்: பழந்தமிழ் இலக்கியத்தின் பிரச்சாரகர்!

ஒளவை ந.அருள்


ஏப்ரல் 6. சிலம்பொலி செல்லப்பனின் நினைவு தினம்.

அவர் 2019-இல் மறைந்தவுடன் வந்த ஓர் அஞ்சலி .

======


ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பள்ளியில் நடந்த சிலப்பதிகார விழாவுக்கு, ‘சொல்லின் செல்வர்’ ரா.பி.சேதுப்பிள்ளை வந்திருந்தார். வரவேற்புரையாற்றிய செல்லப்பனின் செந்தமிழைக் கேட்டு அவர் மனம் குளிர்ந்தார். ‘செல்லப்பன் தமிழுக்கு வாய்த்த சொல்லப்பன்; நயத்தக்க நல்லப்பன்; இன்று முதல் இவர் சிலம்பொலி செல்லப்பன்’ என்றார். அன்று முதல் செல்லப்பனுக்கு ‘சிலம்பொலி’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. அதன் பிறகு, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானமும், சிலம்பொலி செல்லப்பனும் பல மேடைகளில் ஒன்றாக முழங்கினர்.

உயர்நிலைப் பள்ளியில் ஒரு கணக்காசிரியராகத் தனது பணியைத் தொடங்கியவர் செல்லப்பன். கணக்கைக் கரும்பைப் போல உடைத்துக் கற்றுத் தருவாராம். கணக்காசிரியர் தலைமையாசிரியரானார்; மாவட்டக் கல்வி அலுவலரானார். சேலம் மாவட்டம் அவரால் புகழடைந்தது. தமிழக அரசு அவருக்கு உள்ளாட்சித் துறையில் உயர் அலுவலர் பதவி வழங்கியது.

நிர்வாகப் பணிகள்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையின் இயக்குநராகவும், கூடுதல் பொறுப்பாகப் பதிவாளராகவும் (1982 – 1983), தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் (1983 – 1989), உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் (1989 – 1991) தொடர்ந்து தமிழ் வளர்க்கும் முக்கியப் பொறுப்புகளை வகித்தார் செல்லப்பன். கனிவு நிறைந்தவர் என்றாலும் கடமையில் கண்டிப்பு மிக்கவராகவே இருந்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகப் பதவியேற்றபோது, சென்னையில் மட்டும் ஆய்வு, மொழிபெயர்ப்பு, நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் 3 உதவி இயக்குநர்கள் பணியாற்றிவந்தார்கள். மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்து 3 உதவி இயக்குநர்கள் மட்டுமே பணியாற்றிவந்தனர். ஆய்வுப் பணிகள் தேங்கும் நிலை ஏற்பட்டபோது, அவரும் அப்போதைய தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறைச் செயலாளர் ஔவை நடராசனும் இணைந்து எடுத்த முயற்சிகளால் சீராய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உதவி இயக்குநர் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டன. இன்று, தமிழ் வளர்ச்சித் துறையில் மாவட்டம்தோறும் தமிழாய்வு அலுவலர்கள் பணிபுரியும் நிலைக்கு அவரே காரணம். அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் ஆட்சிமொழியை நடைமுறைப்படுத்துவதற்காகத் தமிழாய்வு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். தமிழ் வளர்ச்சித் துறையில் ஆட்சிச் சொல்லகராதியை நடைமுறைப்படுத்தி, அயல் மொழிச் சொற்கள் பலவற்றுக்கு நல்ல தமிழ்க் கலைச் சொல்லாக்கங்கள் ஏற்பட வழிவகை செய்யப்பட்டன. இப்படி எவ்வளவோ காரியங்களை நிர்வாகத்துக்குள் செய்தார்.

தமிழ் விழா நினைவுகள்

திருவள்ளுவர் திருநாளில் தமிழக முதல்வரின் தலைமையில் விழா எடுத்துத் தமிழ் வளர்ச்சிக்கென்று செம்மார்ந்த அறிவிப்புகளை வெளியிடச்செய்த பெருமை செல்லப்பனுக்கு உண்டு. அவர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த காலங்களில், தமிழக அரசின் நிதியுதவி பெற்று நடத்தப்பெறும் அயல் மாநிலத் தமிழ்த் துறைகள், அரசு நிதியுதவியை உரிய காலத்தில் பெற்றுச் சிறப்புற இயங்கின. அதற்குச் சான்றாக, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் முதலியவற்றைக் கூறலாம். உலகத் தமிழராய்ச்சி மாநாடுகள் அனைத்துக்கும் கருத்துச் செறிவுள்ள கண்கவரும் ஓவியங்களைக் கொண்ட மாபெரும் மாநாட்டு மலர்களை அவர் தொகுத்திருக்கிறார். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் தயாரிப்பில் அவருடைய பங்களிப்பை அன்றைய முதல்வர் அண்ணா மனதாரப் பாராட்டியிருந்தார்.

தொடர் சொற்பொழிவுகள்

செல்லப்பனின் முக்கியமான பங்களிப்பு பட்டிதொட்டியெங்கும் பழந்தமிழ் இலக்கியத்தைத் தன்னுடைய உரைகளின் வழி தூக்கிச் சுமந்தவர் என்பதாகும். எந்தப் பொருளைப் பற்றியும் தீரத் தெளிந்து நீள் உரைகளாக ஆற்றுகிற சிறப்பு செல்லப்பனின் தனிப்பெருமை. அவர் உரையில் அறைகூவல், உரத்த ஆவேசம், மற்றவரைக் கிண்டலடித்தல், நயங்குறைந்த நகைச்சுவை ஆகியவை இடம்பெறாது. ஆனால், முதல் முறையாகக் கேட்போருக்கும் பழந்தமிழ் இலக்கியத்தின் மீது காதல் உண்டாகிவிடும்படி விளக்கங்களோடும் சுவாரஸ்யமான உதாரணங்களோடும் பேசுவார். கூடவே, அவர் பேசும் இலக்கியத்தை ஒட்டிய திணை, அன்றைய காலகட்டத்தின் சமூகச் சூழல், வாழ்வியல் விழுமியங்கள் என்று வேறு ஒரு காலகட்டத்தை நம் கண் முன்னே கொண்டுவரும் ஆற்றல் அவருக்கு இருந்தது. கூடவே, தன் வாழ்க்கையின் நடப்புக்களையும், நாட்டுப்புற இலக்கிய வழக்குகளையும், தனிப் பாடல்களையும் சேர்த்துப் பேசுவார்.


சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், சீறாப்புராணம், தேம்பாவணி, வைணவத் தமிழ், பாவேந்தரின் பாடல்கள், காவியங்கள், நாடகங்கள், ராவண காவியம் எனத் தமிழ் இலக்கியங்களை ஆண்டுக்கணக்கில் தொடர் உரையாற்றி மங்காப் புகழ்பெற்றவர். ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் ஐந்து இலக்கியங்களை ஆண்டுக்கணக்கில் தொடர்ப் பொழிவாற்றினார். திருச்செங்கோடு மாநகரில், ஐம்பதாண்டுகளாக விடுதலை வீரர் அண்ணல் காளியண்ணனுடன் இணைந்து, ஆயிரக்கணக்கான தமிழன்பர்களை அழைத்துவந்து, இயல், இசை, நாடக முத்தமிழ் விழாவாக, ஒரு மாநாடுபோல நடத்தி சிலப்பதிகாரப் புகழை நிலைநிறுத்தியவர் செல்லப்பன்.


காப்பியம், பெருங்காப்பியம், மரபுக்கவிதை, புதுக்கவிதை இலக்கியத் திறனாய்வு, ஆய்வு நூல், குழந்தை இலக்கியம், புதினம், சொற்பொழிவுத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, சிறுகதை, இலக்கியம், தன் வரலாறு ஆகிய வகைகளில் 600-க்கும் மேற்பட்ட அணிந்துரைகளை வழங்கியிருக்கிறார் செல்லப்பா. எழுத்துலம் நோக்கி வரும் புதியவர்களைப் பரிவோடு அரவணைத்து அவர்கள் கொடுக்கும் நூல்களைப் படித்துத் திருத்தி, மெய்ப்பும் பார்த்து, அணிந்துரையைக் கொடுப்பது அவருடைய இயல்பு. அவரைப் பொருத்தளவில் தமிழ் நோக்கி வரும் ஒவ்வொருவரும் முதலில் அரவணைக்கப்பட வேண்டியவர்கள். அப்படியான ஆதரவுக் கரம் இன்று அடங்கிவிட்டது!

[ நன்றி: https://www.hindutamil.in/news/opinion/columns/160562--2.html ]

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!

கருத்துகள் இல்லை: