காவிய ஓவியர் ராஜா ரவிவர்மா
பூ.கோ.சரவணன்
ஏப்ரல் 29. ராஜா ரவிவர்மாவின் பிறந்ததினம்.
====
ஓவியங்கள் என்றால் மேற்குலகம் தான் தனித்துவமானது என்கிற எண்ணம் பலருக்கு இருந்தது. அப்பொழுது இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை காட்டுகிற அருஞ்செயலை இவர் செய்தார் .கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் உமாம்பா தம்புராட்டி, நீலகண்டன் பட்டாதிரிபாதி எனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் இவர் .வீட்டில் இசை ஓவியம் என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் சிறந்து விளங்கினார்
இவருக்கு ஓவியக்கலையின் மீது எல்லையில்லா ஆர்வம் வருவதற்கு இவரின் மாமாவான ராஜா ராஜவர்மா காரணம் .அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .தஞ்சாவூர் ஓவியக்கலையை அவர் இவருக்கு பயிற்றுவித்தார் .இந்திய ஓவியங்களில் ஒரு சிக்கல் அதில் உபயோகிக்கப்படும் வண்ணங்கள் .மரம், இலை, பூக்கள், கற்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வண்ணங்கள் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டன .ஓவியங்கள் காலப்போக்கில் மங்குவது இதனால் நடக்க ஆரம்பித்தது.
வாட்டர் பெய்ண்டிங் முறையை ராமசாமி நாயுடு கற்றுத்தந்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார்.அப்பொழுது மேற்சொன்ன வண்ண சிக்கல் எழுந்ததை கண்ட ரவிவர்மா ஆயில் பெய்ண்டிங் பற்றி கேள்விப்பட்டார் .அதைப்பற்றி தெரிந்த ஒரே நபரான மதுரையை சேர்ந்த ராமசாமி நாயக்கர் அதை சொல்லித்தர மறுத்துவிட்டார் .அவரின் சீடர் ஆறுமுகம் பிள்ளை இரவோடு இரவாக இவருக்கு அதன் நுணுக்கங்களை சொல்லிவிட்டு போனார்
தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய ஓவியரிடம் "ஆயில் பைன்டிங்" (oil painting) எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணக்கலவை கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றார்.பின்னர் இந்தியாவின் இதிகாசங்களை தன்னுடைய ஓவியத்தில் காண்பிக்க ஆரம்பித்தார் .தமயந்தி,துஷ்யந்தன், தூது சென்ற கிருஷ்ணர், ரிஷிகன்யா ஆகிய ஓவியங்களை என எண்ணறற புராண கதாபாத்திரங்களை அவர் ஓவியமாக்கினார்
இந்தியாவின் செறிவான வண்ணங்கள் அழகியல் ஆகியவற்றோடு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஐரோப்பிய முறையை கலந்து கொண்டார் .இயல்பான இயற்கை சூழலில் இந்திய தெய்வங்களை அவர் வரைந்தது பலரைக்கவர்ந்தது .அவரின் ஓவியங்களில் தெய்வங்களை கோயில்களில் இருக்கும் சிலையைப்போல வரைவதை அவர் தவிர்த்தார் .சேலை அணிந்த அழகிய தென்னிந்திய பெண்களை மாதிரியாக கொண்டு தெய்வங்களை வரைந்தார்
வியன்னா உலக ஓவிய கண்காட்சியில், சிக்காகோ ஓவிய கண்காட்சியில் என உலகம் முழுக்க தங்க பதக்கங்களை தன் ஒவியங்களுக்காக அள்ளினார் .ஓவியம் என்பது ஒருவரோடு போய்விடக்கூடாது என்பதற்காக ஒலியோகிராபி பிரஸ் ஒன்றை மும்பையில் ஆரம்பித்தார் .ஒரு சுவையான சங்கதி பிரண்டிங் மற்றும் சித்திர செதுக்கல் ஆகியவற்றை செய்து தந்தவர் இந்திய திரைப்பட துறையின் தந்தை தாதா சாகிப் பால்கே .இந்தியாவில் லித்தோபிரஸ் முறையை அறிமுகம் செய்ததும் இவர் தான் .ராஜா என்கிற பட்டத்துக்கு அதிகாரப்பூர்வமாக உரியவர் இல்லை என்றாலும் இவரின் திறமையை மெச்சி இவருக்கு கைசர் இ ஹிந்த் பட்டத்தை வழங்கிய பொழுது ஆங்கிலேய அரசு ராஜா ரவிவர்மா என அழைத்தது
அவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் என்றால் அவரின் ஓவியங்களை கேட்டு வந்த கடிதங்களை பெறுவதற்காகவே அவர் ஊரில் ஒரு தனி அஞ்சல் நிலையம் திறந்தார்கள் .நம் வாழ்வில் ராஜா ரவிவர்மா நீக்கமற கலந்து இருக்கிறார் எப்படி என்கிறீர்களா ?இன்றைக்கும் நம் காலேண்டர்களில் பார்க்கும் லக்ஷ்மி, சரஸ்வதி, பரமசிவன், விஷ்ணு, விநாயகர் எல்லாமும் இவரின் ஓவியங்களே அல்லது அவரின் தாக்கத்தில் எழுந்தவை .
[நன்றி: விகடன்]
தொடர்புள்ள பதிவுகள்:
If you are already a Follower of my blog , thanks for reading!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக