திங்கள், 11 ஏப்ரல், 2022

2077. பி.ஸ்ரீ - 28

தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி

பி.ஸ்ரீ


'சித்திர ராமாயணம்' தொடரில் 1944-இல் வந்த விகடன்  இதழ்களிலிருந்து.

====

தசரத சக்கரவர்த்தியை ராமனுடைய தந்தை என்று தான் அறிமுகப்படுத்துகிறான் கம்பன்.

இம்மாண் கதைக்(கு) ஓர்

இறையாய இராமன்

என்னும்

மொய்ம்மாண் கழலோன்

தருநல்லற மூர்த்தி

அன்னான்.

ராமனைப் பெற்ற பெருமை தசரதனுக்குத்தானே? எனவே, தர்ம மூர்த்தியைத் தந்த தர்ம மூர்த்தி  என்கிறான். ''கங்கையின் உற்பத்தி' 'காவேரியின் உற்பத்தி' என்றெல்லாம் கெளரவிப்பதில்லையா? இந்தப் புண்ணிய நதிகளின் பெருமை முழுவதும் அந்த உற்பத்தி ஸ்தானங்களிலே காணப்படுகிறதா?

இப்படி ராமனின் தந்தையென்று தசரதனைக் கௌரவிக்கும் கவிஞன், இங்கே இந்தச் சக்கரவர்த்தி யின் முன்னோரைக் குறித்துப் பேசாததில் அதிசயம் இல்லை. மனு, இட்சுவாகு, மாந்தாதா, சிபி முதலான அந்தப் பெரிய பெரிய சக்கரவர்த்திகளின் வம்சப் பிரவாகத்தோடு வந்த பெருமையைக் காட்டிலும் எவ்வளவோ மேலானதல்லவா, சந்ததியாக ராமனைப் பெற்றுத் தசரதன் அடையப் போகும் பெருமை, அடையப் போகும் பாக்கியம்?!

அரசன் ஆட்சி செய்யவில்லை!

எனவே, இந்த 'அரசியல் படல’த்திலே 'குலமுறை’யாக வந்த பெருமை பேசப்படவில்லை. அந்தப் பிரமாண்டமான அரண்மனை கூட வர்ணிக்கப்படவில்லை. அந்தக் கொலு மண்டபமும்  ஏன்? அந்தச் சிங்காசனம் கூட  வர்ணிக்கப்படவில்லை. ராஜரீக ஆடம்பரங்களாவது, அதிகார படாடோபங்களாவது பிரஸ்தாபிக்கப்படவுமில்லை.

ராஜரீக ஆடம்பர மாட்சிகளிலே ராஜதர்மம் மறைந்து போகிறது; மறந்தும் போகிறது ராஜாக்களுக்கும் ராஜதந்திரிகளுக்கும். தசரதனோ, ராஜ குணங்களெல்லாம் தனக்குப் பணி செய்ய தான் ஜனங்களுக்குப் பணி செய்து வருகிறானாம். தசரத மன்னன் ஆட்சி செய்யவில்லை; பணி செய்கிறான்: இதுதான் இந்த மன்னன் மாட்சி!  என்கிறான் கவிஞன்.

 

[ ஓவியம்: ஏ.கே.சேகர் ]


இந்த மாட்சியைப் பாருங்கள்; அன்புப் பணியைப் பாருங்கள்;

தாய்ஒக்கும் அன்பின்;

தவம்ஒக்கும் நலம்ப யப்பின்;

சேய்ஒக்கும் முன்நின்(று)

ஒருசெல்கதி உய்க்கும்

நீரால்;

அன்பின் சிகரமல்லவா தாயன்பு? குழந்தைகளுக்குத் தாய் எப்படியெல்லாம் பணி செய்கிறாள்! எப்படிப்பட்ட தியாகங்களையும் அனாயாசமாய்ச் செய்து விடுகிறாளல்லவா? அப்படியெல்லாம் அன்புப் பணிகள் செய்கிறானாம் தசரதனும் தன் மக்களுக்கு.

பாக்கியத்திலே பங்கு

ஒரு பகல் உலகெலாம்

உதரத் துள்பொதிந்(து)

அருமறைக்(கு) உணர்வரும்

அவனை, அஞ்சனக்

கருமுகில் கொழுந்(து)எழில்

காட்டும் சோதியைத்

திருவுறப் பயந்தனள்,

திறம்கொள் கோசலை.

உலகங்களையெல்லாம் தன் வயிற்றிலே அடக்கி வைத்துக் காப்பாற்றிய அகில லோக ஜோதியாகிய பெருமாளையே கௌசலை தன் வயிற்றில் அடக்கி வைத்திருந்து பெற்றெடுத்தாளாம், பிள்ளையாக, எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி!

பாக்கியம் இவளுக்குத்தானா? கோசல நாட்டிற்கு மட்டுமா? இந்த உலகத்திற்கு மட்டுமா? பகவான், வயிற்றிலே வைத்து ரட்சிக்கிறானே அருமையாக, அந்த உலகங்களெல்லாம் பங்கு கொண்டனவாம் கௌசல்யா தேவியின் பாக்கியத்திலே. இவளுடைய புத்திர சம்பத்து, உலக மக்களுக்கெல்லாம் இகபர சம்பத்தாயிற்று! சாதுக்களுக்கெல்லாம் ஆத்ம சம்பத்தாகி விட்டது!

கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்திராதேவி லட்சுமணனையும், சத்ருக்னனையும் பெற்றாள்.

இப்படித் தசரதனுக்கு நாலு பிள்ளைகள் பிறந்ததும், மண்ணுலகத்தோடு மேலுலகமும் ஆடிப் பாடி ஆனந்தம் அடைந்ததாம். ''துஷ்ட ராட்சஸர்கள் தொலைந்தே போனார்கள்!' என்று:

ஆடினர் அரம்பையர்;

அமுத ஏழிசை

பாடினர் கின்னரர்;

துவைத்த, பல்லியம்;

'வீடினர் அரக்கர்’ என்(று)

உவக்கும் விம்மலால்,

ஓடினர்; உலவினர்

உம்பர் முற்றுமே!

ஞான வசீகரம்

பிள்ளைகள் ஆண்டிலும் வளர்ந்து, அழகிலும் வளர்ந்து அறிவிலும் வளர்ந்து வருகிறார்கள், வசிஷ்ட முனிவனுடைய குரு குலத்திலே. அக அழகிலும் புற அழகிலும் ஒருங்கே வளர்ந்து வருகிறார்கள்,  'என்ன அதிசயமான குரு குலக் கல்வி?’ என்று பிரமிக்கும்படி. இவர்களில், ராம லட்சுமணர்கள் ஒருவரை யொருவர் பிரிவதில்லை; ஆறு, குளம், சோலை முதலான இடங்களில் விளையாடும்போதும் பிரிவதில்லை.

அப்படியே பரத சத்ருக்னர்களும் ஒருவரை யொருவர் பிரியாமலே கல்வி கற்று வந்தார்கள்; குதிரையேற்றம் முதலான போர்க் கலைகளில் பயிற்சி பெறும்போதும் பிரியாமலேயிருந்தார்கள். இத்தகைய குருகுலக் கல்வியால் கிடைத்த ஞான சௌந்தரியமும் ராமனுடைய வசீகர சக்தியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும்.

[ நன்றி: சக்தி விகடன் ]


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

பி.ஸ்ரீ படைப்புகள்

பி.கு.   If you enter your e-mail in the 'Follow by Email' box to be found on the top right-hand side of my blog, the service , follow.it          will deliver my blog-updates to your e-mail regularly.

If you are already a Follower of my blog , thanks for reading!


1 கருத்து:

RSR சொன்னது…

Wonderful...p.sree