ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்

சொற்களைச் சுவைப்போம் - 2: உயிர்த்தொடர், மெய்த்தொடர்
பசுபதி


“ சார்! நான் ஆங்கிலத்தில் வேகமாகத் தட்டச்சுச் செய்யக் கணினியில் பயில்கிறேன்  என்பது உங்களுக்குத் தெரியுமோ?”

“ ஓ! தெரியுமே! உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ புதிதாகக் கற்றுக் கொண்டது போலத் தெரிகிறதே? ”

“ ஆமாம், சார், என் ஆசிரியர் மிகச் சுவையான சில வாக்கியங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வோரு வாக்கியத்திலும் 26 ஆங்கில எழுத்துகளும் இருந்ததே அவற்றின் விசேஷம். அதனால், தட்டச்சுச் செய்ய நல்ல பயிற்சியாகவும் இருந்தது;  அதே சமயம், மிகச் சுவையாகவும் இருந்தது. ஆமாம், இதே மாதிரி தமிழில் வாக்கியங்கள் உண்டா?”

“ எல்லா எழுத்துகளும் கொண்ட அத்தகைய சொற்றொடர்களை ஆங்கிலத்தில் ‘பான்கிராம்’ ( Pangram) என்பர். ( 'எல்லா எழுத்து’ என்ற பொருள்). ஒவ்வொரு மொழியிலும் இத்தகைய பான்கிராம்களைக் கண்டுபிடித்தல் சுவையான சொல்லாட்டம் தான்!

ஆனால் ஒவ்வொரு மொழிக்கும் உள்ள தனித்தன்மைகளை வைத்துத்தான் இம்மாதிரி சொல் விளையாட்டுகளை நாம் அணுக வேண்டும். சரி, ஒன்று செய்கிறேன். தமிழில் முதலில் எளிதில் விளையாட, இந்தச் சொல்லாடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறேன்.

ஆய்த எழுத்தை நீக்கி விட்டு, தமிழில் உயிரெழுத்துகள் 12 என்று கொண்டால், அவை:  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ . சரியா?”

“சரி!”

“ இந்தப் பன்னிரண்டு உயிர் எழுத்துக்களோ, அவை உள்ள உயிர்மெய் எழுத்துகளோ வரும்படி, ஓர் அழகான  வாக்கியமோ, சின்னக்  கவிதையோ, குழந்தைகள் பாட்டோ, எழுத முயல்வது தான் இந்த ஆட்டத்தின் முதல் பகுதி. இதை ‘ உயிர்த்தொடர்’ என்றழைக்கலாம்.

நம் உதாரணங்கள் எழுத்தெண்ணிக்கையில் குறுகக் குறுக அழகு அதிகம்! சொற்றொடரில் 12 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “

“ இதோ, என் ’உயிர்த்தொடர்’ முயற்சி. ஒரு காட்சி. 


ஒரு பௌர்ணமி நாள்.

பூஞ்சோலை.

நீ எங்கே?                                       ( 1)

“ இம்மாதிரி, தமிழில் 18 மெய்யெழுத்துகள். க,ச,ட,த,ப,ற (வல்லினம்), ய,ர,ல,வ,ழ,ள (இடையினம்) ங,ஞ,ண,ந,ம,ன (மெல்லினம்). எல்லா  (18) மெய்யெழுத்துகளோ, அவை வரும் உயிர்மெய் எழுத்துகளோ  வரும்படி ஒரு வாக்கியமோ, ஒரு சிறு கவிதையோ, ஒரு விளம்பரமோ  எழுத முயல்வது  இந்த ஆட்டத்தின் இரண்டாம் பகுதி. அத்தகைய சொற்றொடரை ‘மெய்த்தொடர்’ என்றழைக்கலாம். நம் சொற்றொடர்கள் குறுகக் குறுக அழகு அதிகம்! 18 எழுத்துகளே பயன்படுத்தினால், அற்புதம்! “

“ இதோ, என் முயற்சி.. 22 எழுத்துகள் உள்ள ஒரு ‘மெய்த்தொடர்’ ”

தமிழியலிசை ஞானம் பெற

நீ ஒரு கடவுளை வணங்கு.   ( 2)


“ சார், தமிழிலும் இம்மாதிரி சொல்லாட்டங்கள் விளையாடலாம் என்று பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”

“ ஒன்று கவனித்தாயா?  ‘உயிரெழுத்தில்’ கவனம் செலுத்திய (1) -இல்10 மெய்யெழுத்துகளும் உள்ளன!  அதே மாதிரி, ‘மெய்த்தொடரான’ (2) -இல்
7 உயிரெழுத்துகளும் உள்ளடங்கி உள்ளன!  அதனால், இன்னும் கொஞ்சம் யாராவது முயன்றால், மெய்யும், உயிர்மெய்யும் கலந்த  பதினெட்டே எழுத்துகளில் எல்லா உயிர்(12) + மெய்(18)  எழுத்துகளையும்   அடக்க வாய்ப்புண்டு!”

யாராவது அத்தகைய ஓர் அற்புத பொருள் பொதிந்த வாக்கியத்தை/சொற்றொடரை இங்கே இடுவார்களா என்று பார்ப்போம்!
கொஞ்சம் நீளமாக இருந்தாலும் வரவேற்கப்படும் !

தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு


வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சொற்களைச் சுவைப்போம் - 1: அகரம் முதல் னகரம் வரை!

அகரம் முதல் னகரம் வரை !

பசுபதி




தமிழில் ‘அ’ முதல் ‘ஔ’ வரை 12 உயிரெழுத்துகள்: ‘க்’ முதல் ‘ன்’ வரை 18 மெய்யெழுத்துகள். அதனால் ‘அ’ முதல் ‘ன்’ வரை என்றால் தமிழ் முழுதும் என்றாகி விடுகிறது அல்லவா?

இதைத் தான் திருக்குறளும் சொல்கிறதோ? ஏனென்றால், முதல் குறள் ‘அ’ வில் தொடங்குகிறது ; 1330-ஆவது குறள் ‘ன்’ என்று முடிகிறது.

’அமுதசுரபி’  இதழ் 2012 ஜூன் மாதத்தில்    ‘அ’வில் தொடங்கி ‘ன்’ இல் முடிக்க வேண்டும்  என்று ஒரு வெண்பாப் போட்டி வைத்தது .

நான் நினைத்தேன்:

முதல் இரண்டு குறள்களையே ஒரு தனிச்சொல் சேர்த்து , ஒரு நாலடி நேரிசை வெண்பாவாய் எழுதினால், அதுவே  ‘அ’ வில் தொடங்கி ‘ன்’ -இல் முடியுமே !

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - சகலமும்
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்


’அ’ முதல் ‘ன்’ வரை என்ற கருத்தைச்  சாமர்த்தியமாய் ஒரு விளம்பரத்தில் பயன்படுத்தியது ‘ஆனந்தபோதினி’ பத்திரிகை.  ( 1932-இல்) அங்கே வந்த இராஜு செட்டியாரின்  ஒரு நாவலின் விளம்பரத்தைப் படித்துப் பாருங்கள் ! நான் சொல்வது உங்களுக்குப் புரியும்!




உங்களுக்குப் பிடித்த ‘அ***ன்’ வார்த்தை என்ன?

எனக்குப் பிடித்த ஒரு சொல் ‘அங்குஸ்தான்’ !
 ‘க்ரியா’ வின் தற்காலத் தமிழ்அகராதியில்
இருக்கும் இந்தச் சொல்லுக்குப் பொருள்: 

( தைக்கும்போது குத்தாமல் இருக்க) விரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஆங்கிலத்தில் ‘திம்பிள்’ ( thimble) .
 

இந்தச் சொல் எப்படி வந்தது ? யார் முதலில் பயன்படுத்தினார்கள்? எனக்குத் தெரியாது!

[  நண்பர் பாலசுப்பிரமணியன் சொல்லுவது போல்: வடமொழிச் சொல் ‘அங்குஷ்ட’ ; தமிழ் அகராதியில் ‘அங்குட்டம்’ ( பெருவிரல்)  ]

உங்களுக்குத் தெரிந்த மிக நீண்ட ‘அ**ன்’ பெயர் என்ன?

அறவாழிஅந்தணன், அடியார்க்குநல்லான்,  அனந்தபத்மநாபன், அனந்தநாராயணன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன, அல்லவா?  இவற்றில் கடைசிப் பெயருக்குப் பின் ஒரு சுவையான  ‘கதை’ இருக்கிறது. தமிழ் நாவல் முன்னோடி அ.மாதவய்யாவின் மூத்த மகன் மா. அனந்தநாராயணன். நீதிபதியாகப் பணி புரிந்தவர். கலாரசிகர்.   “சில்வர் பில்க்ரிமேஜ்” ( Silver Pilgrimage) என்ற நூலை எழுதியவர். ஜான் அப்டைக் ( John Updike) என்ற பிரபல ஆங்கிலக் கவிஞர் ‘அனந்தநாராயணன் ‘ என்ற பெயரில் உள்ள ஓசையில்  மோகம் கொண்டு ஒரு கவிதையே பாடியிருக்கிறார் !   அந்தக் கவிதையை இங்கே பார்க்கலாம்.


சுவையான ‘அ**ன்’ சொற்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்! 

இது போதும், இப்போது!

பி.கு:

நண்பர் பாலசுப்பிரமணியன் ஒரு நீண்ட ‘அ**ன்’ பெயராய் , ‘அகணிதகுணகணபூஷணன்’ என்பதை முன்வைத்ததும் ( பதிவின் பின்னூட்டமாய் வந்துள்ள கருத்துகளைப்  படிக்கவும்) , மீண்டும் யோசித்தேன்!

ஸம்ஸ்கிருதத்திலிருந்து வந்த ‘அகாதன்’ ( வஞ்சகன், புரட்டன்) என்ற சொல் சில தமிழ் அகராதிகளில் காணப்படுகிறது. இதுதான் மிக நீண்ட பெயர் என்று நினைக்கிறேன்.

ஏன் தெரியுமா?

முதல் எழுத்துக்கும், கடைசி எழுத்துக்கும் நடுவே ‘காத’ தூரம் உள்ளதல்லவா? :-))

~*~o0O0o~*~ 


தொடர்புள்ள பதிவுகள்:
சொல்விளையாட்டு


         

சனி, 22 செப்டம்பர், 2012

செருப்புக்கும் உண்டே திருட்டு! : கவிதை

செருப்புக்கும் உண்டே திருட்டு !

பசுபதி

இன்னிசை வெண்பா





தும்பிக்கை யானைத் துதித்(து)அவன் தாளினைக்
கும்பிடும்  போது குடைந்ததென் புத்தி ;
"தெருக்கடையில் வைக்காமல் தேரடியில் வைத்த
செருப்புக்கும் உண்டே திருட்டு."

[மதுரை ஊர்த்துவ கணபதி
படம்:சில்பி;
 நன்றி:விகடன்]



பி.கு.

இந்த அழகான ஈற்றடியை நண்பர் ஹரிகிருஷ்ணன் எப்போதோ ஒரு கவனகரிடம் சொன்னதாய் நினைவு. கவனகர் எப்படி வெண்பாவைப் பாடினார் என்பது எனக்குத் தெரியாது! இது என்னுடைய  ‘டேக்’!

பி.கு.2
பின்னூட்டங்களைப் படிக்கவும்!

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

புதன், 19 செப்டம்பர், 2012

’தேவன்’: போடாத தபால் - 1

போடாத தபால் - 1
தேவன்



’தேவன்’ தன் கையெழுத்தே இல்லாமல்  பல தொடர்களையும் கட்டுரைகளையும்  ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார். அவற்றில் ‘போடாத தபால்’  என்ற தொடரும் ஒன்று. தேவனின் குரு 'கல்கி' 40-களில் கல்கி இதழில் ' சேராத கடிதம்' என்று சில கடிதங்கள் எழுதினார். அவற்றின் தாக்கத்தில் 'தேவன்' இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கலாம். இவற்றைப் போலப் பல படைப்புகள் இன்னும் நூல்களாய் வரவில்லை.  




அன்றைய நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள  இந்தத் தொடர் மிகவும் உதவும்.  அவருடைய மெல்லிய நகைச்சுவையிலிருந்தே  ‘தேவ’னின் முத்திரை  தெரியும்.

இதோ ஒரு காட்டு: ( 1953-ஆம் ஆண்டு  என்று நினைக்கிறேன். )






[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தேவன்’: போடாத தபால்

தேவன் படைப்புகள்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மையல்: கவிதை

மையல்
பசுபதி


கருமை ஒளிரும் அழகி -- உன்னைக்
. . . கண்ட கண்கள் புனிதம்
பரிசம் தந்தும் அடைவேன் -- உந்தன்
. . . பரிசம் என்றும் வேண்டும்
அருமை அறிந்த ஆண்கள் -- உன்னை
. . . அடையப் போட்டி இடுவர்
பெருமை பிறகு தருவாய் -- என்மேல்
. . . பிறர்பொ றாமை வளரும்


கடையிற் பார்த்த உடனே -- என்னைக்
. . . காதற் தீயில் இட்டாய்
எடைக்குப் பொன்னும் சமமோ -- உன்றன்
. . . எழிலும் ஒளிரக் கண்டேன்
அடைய ஆர்வம் கொண்டேன் -- உன்னை
. . . அணைக்கக் கைது டித்தேன்
தொடையில் உன்னை வைக்க -- அருகில்
. . . துள்ளி ஓடி வந்தேன்


விடியும் காலை வேளை -- உன்னை
. . . விரைந்து வாரி எடுப்பேன்
கடிதில் காப்பி குடித்து -- உடனே
. . . கையில் தூக்கிக் கொள்வேன்
இடியும் புயலும் துச்சம் -- விரியும்
. . . இணையம் என்றன் சொர்க்கம்
மடியில் அமருங் கணினி -- உன்மேல்
. . . மைய லாகி நின்றேன்.

[ 23 ஜூலை, 2000 ‘திண்ணை’ யில் வெளியானது ]

தொடர்புள்ள பதிவுகள்:

கவிதைகள்

திங்கள், 17 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 7

தமிழ் உயர்ந்தது
'கல்கி'


முந்தைய பகுதிகள்:


பகுதி 1,  பகுதி 2 ,  பகுதி 3 ,  பகுதி 4 ,  பகுதி 5 ,  பகுதி 6


( தொடர்ச்சி)

பாரதி மணிமண்டபத் திறப்பு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் அக்டோபர்,13, 1947 -ஆம் தேதி நடந்தன. அந்த விழாவிற்குக் கட்டியம் கூறுவது போல்,  12-ஆம் தேதி பிரசுரமான ‘கல்கி’ சிறப்பிதழில் ஓர் உணர்ச்சி மிக்க தலையங்கத்தைத் தீட்டினார் ஆசிரியர் ‘கல்கி’.



அதிலிருந்து ஒரு பகுதி:

”நம் கண் முன்னே இதோ ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கிறது! அதுவும் நமது செந்தமிழ் நாட்டில் நடந்திருக்கிறது!

தேச மகாகவிக்கு ஒரு ஞாபகச் சின்ன மண்டபம் இதோ எழுந்திருக்கிறது! தமிழ்நாட்டுக்குப் புத்துயிர் அளித்த கவியரசருக்குத் தமிழ் மக்கள் சமர்ப்பித்த காணிக்கை இதோ காணப்படுகிறது!

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மகாகவிக்கு ஞாபகார்த்த மண்டபம் கட்டிய பெருமையைத் தமிழ்நாடு அடைந்திருக்கிறது!

இதோ அமரர் பாரதியார் ஆகாசத்தில் வந்து நிற்கிறார். “ தலை நிமிர்ந்து நில்”, என்றும் “மார்பை நிமிர்த்தி நட”, என்றும் தம் வாணாளெல்லாம் உபதேசித்த தீர மகாகவி முதன் முதலாகத் தலை குனிந்து நோக்குகிறார்.
. . . // . .
“ஆகா! நாம் கண்ட கனவுகளிலே இதுவுமா பலித்து விட்டது?” என்று வியப்படைகிறார்.
. . . // . .
கவியரசரின் கனவைத் தமிழ் மக்கள் இன்று நிறைவேற்றி விட்டார்கள்! காணி நிலத்திலே ஒரு கவின்பெறு மாளிகை கட்டித் தந்து விட்டார்கள்! “

பின்னர் வந்த அக்டோபர் 26, ‘கல்கி’ இதழில் “தமிழ் உயர்ந்தது!’ என்ற தலைப்பில் விழாவைப் பற்றி ஆறு பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினார் ‘கல்கி’.

அதன் முதல் பகுதி:

”தமிழ்நாடு உயர்ந்தது! தமிழ் மக்களின் சீர் உயர்ந்தது! தமிழும் தமிழ் நாடும் தமிழ் மக்களின் பேரும் இமயத்தைப் போல் உயர்ந்தன! இமயத்துக்கப்பாலும் ஆசியாக் கண்டம் முழுவதிலும் சிறந்தன! 

“இதுகாறும் ஆசியாவிலேயே இம்மாதிரி ஒரு கவிஞருக்கு ஞாபகச் சின்ன மண்டபம் கட்டியதில்லை! இவ்வளவு சிறப்பாக விழாவும் நடந்ததில்லை!’ என்று பேராசிரியர் திரு சோமசுந்தர பாரதியார் பாரதி மணி மண்டப மேடைமீது கூறினார். “


விழாவில் நடந்த இன்னிசை நிகழ்ச்சிகள் என்ன?


12-ஆம் தேதி மாலை, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இன்னிசைக் கச்சேரி. பெரும்பாலும் பாரதி பாடல்களைக் கொண்டு விளங்கியது. எம்.எஸ்.ஸின் பின்னணி இசையுடன் ராதா, ஆனந்தி இருவரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

13-ஆம் தேதி அன்று, பாரதியாரின் புதல்வியர் “ வாழிய செந்தமிழ்” பாட, ராஜாஜி மண்டபத்தைத் திறந்து வைத்தார்.  விழாவிற்கு முன்னாள் ஒரு கச்சேரி செய்த எம்.எஸ். சுப்புலக்ஷ்மி விழாவன்று பாரதியின் “ பொழுது புலர்ந்தது” பாடலையும் , கல்கியின் “தெய்வத் தமிழ் நாட்டினிலே” என்ற பாடலையும் பாடினார். சொற்பொழிவுகளுக்கிடையே சகுந்தலா பாரதி தாம் இயற்றிய அகவற்பா ஒன்றைப் பாடினார். டி.கே.ஷண்முகம் இறுதியில் “ ஜயபேரிகை கொட்டடா!” என்ற பாடலைப் பாடினார். குளிக்கரை பிச்சையப்பப் பிள்ளையின்  நாகஸ்வரமும்,  தண்டபாணி தேசிகரின்  கச்சேரியும்  விழாவைச் சிறப்பித்தன. ”நிறைவுக் கட்டத்தில் கச்சேரி செய்த தண்டபாணி தேசிகர் “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா” என்ற கவிமணியின் பாடலை எடுத்ததும், ஆயிரம் குரல்கள் அவருடன் சேர்ந்து பாடின” ( சுந்தா, “பொன்னியின் புதல்வர்” )



 ‘கல்கி’க்கு நன்றி சொல்லும் வகையில், அதே மண்டபத்தில்,  ‘கல்கி’ காலமானதற்கு அடுத்த ஆண்டில் , என்.எஸ். கிருஷ்ணனின் பொறுப்பில் நடந்த பாரதி விழாவில் ‘கல்கி’யின் படத்தைத் திறந்து வைத்தார் பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டர்.

பிறகு 1958-இல் சிவாஜி கணேசன் நடத்திய பாரதி விழாவில், அதே மண்டபத்தில் ‘கல்கி’யின் வர்ணப் படத்தை எஸ்.எஸ்.வாசன் திறந்துவைத்தார்.

ஆம், பாரதி மணிமண்டபம் கல்கியின் மகத்தான சாதனைகளில் ஒன்று.


( முற்றும் )

தொடர்புள்ள சில பதிவுகள்:

இன்றைய மணிமண்டபம்: சில படங்கள்

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 6

தமிழர் விழா 
" ராவுஜி"

முந்தைய பகுதிகள்;

பா. ம -1, பா. ம -2, பா. ம -3, பா. ம - 4, பா. ம - 5



(தொடர்ச்சி)

பாரதி மணிமண்டப அஸ்திவாரம் நாட்டு விழாவைப் பற்றி ‘விகடனில்’ ஒரு கட்டுரை வெளியானது. அதை எழுதியவர் ( படங்களையும் எடுத்தவர்) “ராவுஜி” என்று போட்டிருக்கிறது. ( அவர் ’நாரதர்’ ஸ்ரீனிவாச ராவ்  )

இதோ அந்தக் கட்டுரையும், படங்களும் :













[ நன்றி : விகடன் ]

மண்டபம் கட்டி முடிக்க மேலும் நிறைய பணம் தேவை என்பதை விரைவில் அறிந்த கல்கி மீண்டும் நிதி திரட்டினார்.

கடைசியில், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு இரண்டு மாதங்களுக்குப் பின், 47 அக்டோபரில் மணிமண்டபத் திறப்பு விழாச் சிறப்புற நடந்தது. அதைப் பற்றிச் சில தகவல்கள் இதோ :

( தொடரும் )



'கல்கி’ கட்டுரைகள்

சனி, 15 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 5

பாரதி பற்றி ராஜாஜி

முந்தைய பகுதிகள்:


பா.ம-1 , பா.ம -2 , பா.ம -3, பா. ம -4 




( தொடர்ச்சி)


ராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை என்கிறார் கல்கி. அவை: 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியின் கவிதைச் சிறப்பு 3) பாரதியைப் போற்ற வேண்டிய முறை.

கல்கியின் எழுத்திலேயே  முதல் விஷயத்தில் சில பகுதிகளைப் பார்க்கலாம்:

இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லோரையும் விட எனக்கு வயது அதிகம் .( சிரிப்பு). அவருடைய மாமாவைத் தவிரச் சொல்லுகிறேன். வயது அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்கவேணும்?

1906-ம்  வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும்.அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள் வீசி எறியப்பட்டன.செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.ஏ.நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்கள் போல் காரியங்களில் இறங்கிவிட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.

. . . // . . .

(பாரதியார்)  தமக்காக ஒரு பாட்டும் பாடிக் கொடுத்தார் என்று ராஜாஜி சொன்னார். அந்தக் காலத்திலேயே பௌதிக நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற முயற்சி சேலத்தில் ராஜாஜியினால் தொடங்கப் பட்டிருந்தது. தமது இயக்கத்துக்குச் சாதகமாகப் பாரதியாரை ஒரு பாடல் பாடித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதன் பேரில்தான் ‘ஆதிசிவன் பெற்றுவிட்டான்’ என்ற பாடலைப் பாரதியார் பாடினார். அந்தப் பாட்டினால் பௌதிக சாஸ்திரத்தைத் தமிழிலே சொல்ல முடியாது என்று எண்ணுகிறவர்களைக் குறித்து , ‘என்றந்தப் பேதை உரைத்தான்’ என்று காரசாரமாகப் பாரதியார் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.

. . . // . . .

ஒத்துழையாமை இயக்கத்தை முன்னிட்டு ராஜாஜி வக்கீல் தொழிலை விட்டபோது, பாரதியார் , “வக்கீல் தொழிலை விடுவதாவது! பைத்தியக்காரத்தனம்! உனக்குப் பணம் வேண்டாமென்றால் சம்பாதித்து என்னிடம் கொடு!” என்று சொன்னதைக் குறிப்பிட்டு, பிற்பாடு பாரதியார் தமது கருத்தை மாற்றிக் கொண்டதையும் தெரிவித்தார்.

பாரதியார் திலகர் கோஷ்டியைச் சேர்ந்தவர். முதலில் அவருக்கு மகாத்மாகாந்தியின் இயக்கத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் அந்த இயக்கம் தேசத்தில் பலமாகத் திரண்டு எழுந்ததைக் கண்டதும் தமது கருத்தை மாற்றிக் கொண்டார். மகாத்மாவைப் பற்றிப் பாடலும் பாடினார் “ என்று குறிப்பிட்டார்.


1935-இல் எழுந்த “பாரதி மகாகவியா? இல்லையா” என்ற விவாதம் ராஜாஜிக்கு மனத்தில் தோன்றியிருக்க வேண்டும். அதைப் பற்றி நேரிடையாகக் குறிப்பிடாமல், சில வார்த்தைகள் சொன்னார்:

‘கல்கி’யின் சொற்களில், ராஜாஜி சொன்னது :

...... ரோஜாப் புஷ்பம் உயர்வானதா, மல்லிகைப் புஷ்பம் உயர்வானதா என்பது போன்ற வீண் விவாதங்களும் செய்யக் கூடாது.  நமக்கு ரோஜா, மல்லிகை எல்லாம் வேண்டியதுதான்.சிலர் குழந்தைகளைப் பார்த்து ‘உனக்கு அப்பா வேண்டுமா? அம்மா வேண்டுமா?’ என்று கேட்பதுண்டு. அப்படிக் கேட்கிறவர்களைக் கன்னத்தில் அறையலாம் என்று எனக்குத் தோன்றும். அதுபோலவே, கவிகளில் எந்தக் கவி உயர்ந்தவர் என்று விவாதிப்பதும் தவறு. ‘கம்பர் உயர்ந்தவரா? பாரதி உயர்ந்தவரா? என்றெல்லாம் விவாதிக்கக்  கூடாது. நமக்குக் கம்பரும் வேண்டும்; பாரதியும் வேண்டும். உண்மைக் கவி எது என்று தெரிந்துகொண்டு எல்லாவற்றையும் அநுபவிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். “


இறுதியில் கல்கி வந்தனோபசாரம் கூற எழுந்தார்:   அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் ,

பல வருஷ காலமாக எந்தக் காரியத்திலும் ராஜாஜியை ஆதரிப்பது எனக்கு வழக்கமாய்ப் போயிருக்கிறது. இன்றைக்கு ஒரு நாளாவது அவரை மறுத்துப் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ராஜாஜி இந்தப் பாரதி ஞாபகச் சின்ன விஷயமாக நான் செய்த முயற்சியைக் குறித்து ஏதாவது பாராட்டிப் பேசுவார் என்றும், அதை நான் மறுத்து, “அப்படி ஒன்றும் நான் பிரமாதமாய்ச் செய்துவிடவில்லை’ என்று தெரியப் படுத்தலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் ராஜாஜி நான் எதிர்பார்த்தபடி சொல்லவில்லை. ‘கல்கி’ என்ன பிரமாதமாய்ச் செய்துவிட்டார்? ஒன்றும் இல்லை; பாரதியார் பாடல்களுக்காக அல்லவா பணம் வந்தது ‘ என்று கூறினார். எனவே, இது விஷயத்திலும் ராஜாஜியை நான் ஆதரிக்க வேண்டியே வந்திருக்கிறது”

என்று தொடங்கி, பலருக்கும் நன்றி சொல்ல,  விழா இனிதே முடிந்தது.

இது வரை ‘கல்கி’ எழுதிய ‘மணிமண்டப அஸ்திவாரம் நாட்டு விழா’வைப் பற்றிய கட்டுரையின் சில பகுதிகளைப் பார்த்தோம்.

அதே விழாவைப் பற்றி ‘ஆனந்த விகடன்’ என்ன சொன்னது என்று பார்க்க வேண்டாமா? அதுவும் படங்களுடன்?

( தொடரும் )

அடுத்த பகுதி

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள் 

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ரா.கி.ரங்கராஜன் - 4: ‘கல்கி’யின் முத்திரை!

’கல்கி’யின் முத்திரை!

ரா.கி.ரங்கராஜன்

”ஒரு விஷயத்தில் எனக்கு ரொம்ப வருத்தம், சார்” என்றேன் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களிடம்.

எஸ்.ஏ.பி

அவர் “ என்ன வருத்தம்? “ என்று உடனே கேட்கவில்லை. மௌனமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். அவரது இதயம் துயரத்தால் கனக்கிறது என்று ஊகித்துக் கொண்டேன். ஏனெனில் கல்கி காலமான செய்தியைக் கேட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.

வெகு நேரத்துக்குப் பிறகு “என்ன வருத்தம்? என்று எஸ்.ஏ.பி. கேட்டார்.

“இந்த மனிதர் கல்கி பத்திரிகைத் துறையில் எத்தனை புதுமைகள் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்து விட்டார். நமக்கு எதுவும் பாக்கி வைக்கவில்லை. தலையங்கம், கார்ட்டூன், சினிமா விமர்சனம், சங்கீத விமர்சனம், பிரயாணக் கட்டுரை, விகடத் துணுக்கு, சிறுகதை, தொடர்கதை --இப்படி ஒரு பத்திரிகைக்கு என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமோ அவ்வளவும் செய்து முடித்து விட்டார். புதிதாக நாம் செய்வதற்கு இனிமேல் எதுவுமே இல்லாமல் போய்விட்டது, பாருங்கள். அதுதான் வருத்தம். எது செய்தாலும் அவரைக் காப்பி அடித்ததாகவே இருக்கும், “ என்றேன்.

கல்கி

“ஒருவகையில் உண்மைதான், “ என்று ஒப்புக் கொண்டார் எஸ்.ஏ.பி. “ஆனால், அதற்காக வருத்தப் படத் தேவையில்லை. கல்கி ஒரு பிரமாதமான வழிகாட்டி. அற்புதமான இன்ஸ்பிரேஷன் கொடுத்தவர் அவர். அவர் ஆரம்பித்த அதே அம்சங்களை வேறு வேறு விதமாக, புதிய புதிய வடிவத்தில் நாம் செய்ய முடியும் . எல்லாத் தமிழ் பத்திரிகைகளும் இனிமேல் அப்படித்தான் செய்யப் போகின்றன. புதுமையும் இருக்கும். அதில் கல்கியின் முத்திரையும் இருக்கும், “ என்றார்.

அது சத்தியமான அபிப்ராயம். இன்றைக்கு எந்தப் பத்திரிகையில் எந்தப் புதிய அம்சத்தைப் பார்த்தாலும், அதன் மூலத்துக்கு மூலத்துக்கு மூலத்தை ஆராய்ந்தால் கல்கி செய்ததாகத்தான் இருக்கும்.

 [ நன்றி: ‘கல்கி’]

தொடர்புள்ள பதிவுகள்:
ரா.கி.ரங்கராஜன்

வியாழன், 13 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 4

பொழுது புலர்ந்தது !

முந்தைய பகுதிகள் :

பா.ம -1 , பா.ம -2 , பா. ம - 3

( தொடர்ச்சி)

நிதி சேர்ந்த வேகத்தைப் பார்த்த ‘கல்கி’ நூல் நிலையம் அமைப்பதென்ற முந்தைய திட்டத்தை மாற்றிக் கொண்டார்; பெரிதாக ஒரு நினைவாலயம் எழுப்பத் திட்டமிட்டு, எல்.எம்.சித்தலே என்ற புகழ் பெற்ற கட்டிடக் கலை நிபுணரிடமிருந்து அன்பளிப்பாக ஒரு வரைபடம் பெற்றார்.

1945-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற பாரதி மணிமண்டப அஸ்திவார விழா நிகழ்ச்சிகளைப் பற்றிப் “பொழுது புலர்ந்தது” என்ற கட்டுரையை எழுதினார் கல்கி.  அதிலிருந்து நான் ரசித்த சில காட்சிகள்:



பாரதியாரின் இரு புதல்விமார்களும், பேத்தியும்
                          முருகா முருகா முருகா
                            வருவாய் மயில் மீதினிலே
                           வடிவேலுடனே வருவாய்
என்று பாட,  பள்ளத்திலிருந்த அஸ்திவாரத்தில் செங்கல்களை வைத்துச் சுண்ணாம்பைத் தீற்றினார் ராஜாஜி.  அவர் பள்ளத்திலிருந்து மேலே வந்தவுடன், ‘கல்கி’ “ தங்களை அஸ்திவாரக்கல் மட்டும்தான் நாட்டச் சொன்னோம்.தாங்கள் கட்டிடத்தையே கட்டி விடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று, சபையின் சிரிப்புக்கிடையே,  கூறினார் !




பிறகு ஸ்ரீமதி டி.கே.பட்டம்மாள் “பொழுது புலர்ந்தது” என்ற பாரதி பாட்டைப் பூபாளம், பிலஹரி முதலிய நாலு ராகங்களில் பாடினார்.

காந்தியிடமிருந்து வந்த , தமிழில் எழுதப் பட்ட

வாழ்த்துச் செய்தியை



ராஜாஜி படித்தார். பிறகு சுத்தானந்த பாரதியாரின் கடிதத்தின் ஒரு பகுதியைப் படித்த ராஜாஜி, “இதற்கு மேல் பெஹாக் ராகம் தெரிந்தவர்கள் படிக்கலாம்” என்று சபையின் பக்கம் கடி்தத்தை நீட்டினார்; சபையில் சிரிப்பு ஓய்ந்ததும், யாரும் முன் வராதலால், ராஜாஜியே அந்தக் கீர்த்தனத்தை வசன நடையில் படித்தார்!


ராஜாஜி, எட்டயபுரம் மகராஜா, டி.கே.சி, டாக்டர் ராஜன், டாக்டர் சுப்பராயன், நாமக்கல் கவிஞர், “கல்கி” ஆகிய தலைவர்களுக்கு “வாழ்த்துப் பத்திரங்கள் படிக்கப் பட்டபோது மேடையில் சில சமயம் துவந்த யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவரவர்கள் தங்களுக்குரிய் பத்திரங்களைப் படிக்க ஆரம்பிக்கும் போதே பிடுங்கிக் கொள்ள முயல்வதும், படித்துக் கொண்டிருந்தவர் மேலும் படிக்க முயல்வதுமாய் இருந்த போதுதான் மேற்படி துவந்த யுத்தம் நிகழ்ந்தது”.

ராஜாஜியின் முகவுரை, டி.கே,சியின் உரைக்குப் பின்னர், மதுரை வைத்தியநாத ஐயர் பேசினார்: “நான் பாரதியின் சிஷ்யன். அவரிடம் இரண்டு மாதம் தமிழ் படித்தவன் “ என்று தன் பேச்சை அவர் ஆரம்பித்தார். ( அவர் ஹைஸ்கூலில் படிக்கும்போது வழக்கமான தமிழ்ப் பண்டிதர் இரண்டு மாதம் லீவில் போனபோது, பாரதியார் அவருக்குப் பதிலாகத் தமிழ்ப் பாடம் கற்பிக்க வந்தாராம்.)


பிறகு பேசிய டாக்டர் ராஜன் “ பாரதியார் அமரத்வம் அடைந்த கவி என்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அமரத்வம் எப்படி அடைவது என்பது எனக்குத் தெரியாது . நான் ஒரு டாக்டர். என் கையால் வியாதியஸ்தர்கள் இறந்து போவதைத் தான் நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறியபோது, கொட்டகையே சிரிப்பால் அதிர்ந்தது.

பிறகு நாமக்கல் கவிஞர் எழுந்திருந்து “ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற பாட்டைக் கம்பீரத்வனியில் பாடிவிட்டு, அவர் பாரதியைச் சந்தித்த நிகழ்ச்சியை விவரித்தார்.

பாரதியிடம் ஓர் ஓவியன் என்று அவர் அறிமுகம் செய்து வைக்கப் பட்டவுடன், பாரதி  நாமக்கல் கவிஞரைப் பார்த்து
நீர் என்னை ஓவியத்தில் தீட்டும்; நான் உம்மைக் காவியத்தில் தீட்டுகிறேன்” என்றார். பிறகு அவர் கவிஞர் என்று அறிந்ததும் ஒரு பாட்டுப் பாடச் சொன்னவுடன்,  நாமக்கல் கவிஞர்
                தம்மரசை பிறர் ஆள விட்டுவிட்டுத்
               தாம் வணங்கிக் கைகட்டி நின்றபேரும்

என்ற பாட்டின் முதல் அடியைப் பாடியதும், பாரதியார் ஆவேசத்துடன்,
பாண்டியா! நீ புலவனடா!” என்றார்.

ஒரு சமயம்  நாமக்கல் கவிஞரும், பாரதியாரும் தூத்துக்குடியில் நடந்த ஒரு பாட்டுப் போட்டிக்குப் பாட்டுக்கள் அனுப்பினார்களாம். இருவர் பாடல்களும் பரிசுக்குத் தகுதியில்லை என்று தள்ளிவிட்டார்களாம்!  இந்த விஷயத்தில் தமக்கும், பாரதிக்கும்  ஒற்றுமை உண்டு என்று நாமக்கல் கவிஞர் சொன்னதைச் சபையோர் பெரிதும் ரசித்தனர்.

நாமக்கல் கவிஞர் பேசிய பின்னர், ராஜாஜி சுமார் முக்கால் மணி நேரம் பேசினார். 

(தொடரும்)

அடுத்த பகுதி

பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள்

புதன், 12 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 3

செல்லம்மாள் பாரதியின் கடிதம்

முந்தைய பகுதிகள்:

பாரதி மணிமண்டபம் - 1   ,    பாரதி மணிமண்டபம் - 2




(தொடர்ச்சி)

“ பாரதி பிறந்தார்” கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' ஆசிரியர் பல கட்டுரைகளைக் 'கல்கி'யில் எழுதி இருக்க வேண்டும். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றை இத்துடன் இணைத்திருக்கிறேன். ( மே 13, 45- இதழில் வந்தது )

எட்டயபுரம் ராஜா நிலம் கொடுத்தது பற்றி எழுதி இருக்கிறார். ராஜாஜியின் தலைமையில்  3-6-45-இல் அஸ்திவார விழா நடத்துவதென்ற தீர்மானத்தையும் சொல்கிறார்.





அதே கட்டுரையில் ஸ்ரீமதி செல்லம்மாள் பாரதி 30-4-45 -இல் எழுதிய  ஒரு கடிதத்தையும் பிரசுரிக்கிறார் 'கல்கி'. ( 29-4-45 தேதி 'கல்கி' யில் வெளியான 'விஷயம்' ஒன்றைக் குறிப்பிடுகிறார் செல்லம்மாள் பாரதி; போன பதிவில் எழுதியபடி, சேர்ந்த பணத்திலிருந்து அவருக்கு  ஓர் உபகார நிதி அளிப்பது பற்றிய  கீழ்க்கண்ட அறிக்கை அது .



 'கல்கி'க்கும் ஓர் அன்பளிப்பு வைத்திருக்கிறேன் என்கிறார் செல்லம்மாள். அது என்ன என்று அறியக்  கடிதத்தைப் படியுங்கள்!







பாரதி மணிமண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா எப்படி நடந்தது? பார்க்கலாமா?


[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

பாரதி மணிமண்டபம் - 2

காந்தி படித்த பாரதி பாட்டு 


முந்தைய பகுதி :

பாரதி மணிமண்டபம் -1    


( தொடர்ச்சி)

ரகுநாதன் ஐந்து ரூபாய் செக்குடன் எழுதிய கடிதத்தை வெளியிட்ட ‘கல்கி’ , எட்டயபுரத்தில் ஒரு வாசகசாலை அமைக்க வேண்டுமானால், அதற்கு “ஒரு பெரிய ஐந்து, அதாவது  ஐயாயிரம் ரூபாயாவது” வேண்டும் என்று ஒரு அடிக்குறிப்பு எழுதினார்.

பாரதி ஞாபகார்த்த நிதி பற்றிய செய்திகளைக் கல்கி தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.   நிதி மேலும் சேரப்  பாரதியைப் பற்றியும் அவ்வப்போது எழுதுவார்! உதாரணமாய்,  காந்தி தமிழ் படிக்கிறார் என்றும் , பாரதியின் பாப்பா பாட்டைப் படிக்கிறார் என்றும் ஒரு அட்டைப்பட விளக்கத்தில் எழுதுகிறார்!




கல்கி எழுதிய “பாரதி பிறந்தார்” என்ற கட்டுரையின் தாக்கத்தையும்  சின்ன அண்ணாமலை ( “பாரதி பிறந்தார்” என்ற கல்கியின் பாரதி புத்தகாலய நூலின் ( 64) முன்னுரையில்) இப்படி விவரிக்கிறார்.



ஆசிரியர் கல்கியின் ஜாதக விசேஷம் என்னவென்றால், அவர் என்ன எழுதினாலும், அல்லது எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அதை மற்ற எழுத்தாளரும் பத்திரிகைக்காரர்களும் தாக்க வேண்டும் என்பது தான்!

ஆனால் மேற்படி வழக்கத்துக்கு விரோதமாகச் சென்ற 1944-ம் ஆண்டில் ஒரு அதிசய சம்பவம் நிகழ்ந்தது. அதாவது ஆசிரியர் கல்கி ஆரம்பித்த விஷயத்துக்கும் ஆரம்பித்த காரியத்துக்கும் தமிழ் நாட்டில் மகத்தான வரவேற்புக் கிடைத்தது!   
 . . . // . . .

“ஸ்ரீ ரகுநாதன் அவர்கள் சுபகரமாக ஆரம்பித்து வைத்த மேற்படி ஞாபகச் சின்ன நிதியானது நாளடைவில் மிகப் பெரிய நிதியாக மாறிப் “போதும்! போதும்!’ என்று  (கல்கி) ஆசிரியரே அறிவித்துக் கொள்ளும் அளவுக்குப் பெருகிவிட்டது.. . . . ஐயாயிரம் ரூபாயாவது சேருமா என்று ரொம்பவும் சந்தேகத்தோடு ஆரம்பித்த  நிதியானது நாற்பதினாயிரம் ரூபாய்க்குமேல் எட்டிப் போய்விட்டது.


[ 'கல்கி', ஏப்ரல் 45 ]


மேற் கண்டவாறு (சேர்ந்த)  பாரதி ஞாபகார்த்த நிதியைக் கொண்டு கல்கி ஆசிரியர் தமிழ் மக்களின் பூர்ண சம்மதத்துடன் மற்றொரு முக்கியமான காரியத்தையும் செய்து முடித்தார். அதாவது, மேற்படி தொகையிலிருந்து ரூபாய் பத்தாயிரத்தைத் தனியாக ஒதுக்கிப் பாங்கியில் போட்டு அதிலிருந்து வரும் வட்டித் தொகையை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை ரூபாய் 112-8-0 வீதம் பாரதியாரின் வாழ்க்கைத் துணைவிக்கு அவருடைய ஜீவிய காலம் வரை உதவியாக அளிக்க ஏற்பாடு செய்தார். 

. . . // . . .

ஒரு கட்டுரையின் மூலம் ரூபாய் நாற்பதாயிரம் வசூல் செய்வதென்பது தமிழ் நாட்டின் சரித்திரத்திலேயெ புதிய விஷயமாகும். ஒரு பெரிய அதிசயம் என்று கூடச் சொல்லலாம் “

பின் குறிப்பு:

மணிமண்டபத்துக்கு முதல் ‘போணி’யாய்க் காசோலையை அனுப்பிய ரகுநாதன் “ வெள்ளிமணி” பத்திரிகைக்கு 47-இல் எழுதிய ஒரு கடிதத்தை யும், அதற்கு ஆசிரியர் “சாவி” எழுதிய பதிலையும்  படியுங்கள்! இரண்டும் அரிய ஆவணங்கள்! 



“ பாரதி பிறந்தார்”  கட்டுரைக்குப் பின் பாரதி ஞாபகச் சின்னம் பற்றிக் 'கல்கி' பல கட்டுரைகள்/செய்தி அறிவிப்புகள்  'கல்கி'யில் எழுதினார். அவற்றுள் எனக்குக் கிடைத்த ஒன்றைப் பார்க்கலாமா?

(தொடரும்)

அடுத்த பகுதி

 பாரதி மணிமண்டபம்: மற்ற கட்டுரைகள் 

'கல்கி’ கட்டுரைகள்