திங்கள், 28 ஏப்ரல், 2014

தேவன் - 17 : ரங்கூன் பெரியப்பா

ரங்கூன் பெரியப்பா
“இந்திரன்”



" தேவன் (விகடன்) அலுவகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்வார். செவ்வாய் இரவு அடுத்த இதழ் முடிந்தாக வேண்டும். கடைசி பக்கங்கள் அச்சாக வேண்டும். இரவு சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு அலுவலகம் போவார். கார் ஓட்டும்போது தூக்கம் வராமலிருக்க நான் அருகிலேயே உட்கார்ந்திருப்பேன். ஏதாவது பேசிக்கொண்டே போவார். அங்கு போனபிறகுதான் தெரியும் - எதிர்பார்த்த இரண்டு பக்க விளம்பரங்கள் கிடைக்கவில்லை என்று விளம்பர சேகரிப்பு இலாகாவினர்  சொல்வார்கள். உடனே உட்கார்ந்து ஏதோ தலைப்பில் அவசர அவசரமாக ஒரு கட்டுரை எழுதுவார். ஓவியங்கள் தயாராகும். விடியற்காலை நான்கு மணிக்கு வேலை முடியும். மறுநாள் காலை பத்து மணிக்கு மறபடியும் ஆபீசில் இருப்பார், முதல் பிரதியைச் சரிபார்க்க! 

தீபாவளி மலர் வேலை என்றால் தினமும் இதே கதைதான். ஒரு நாளைக்கு 16-18 மணி நேரம் உழைப்பு. தானே எல்லாவற்றையும் சரிபார்த்தால்தான் அவருக்கு திருப்தி.” 
               - ”அன்னம்” ( கே.விசுவநாதன்) , தேவனின் சகோதரி மகன்        

’தேவன்’ பயன்படுத்திய பல புனைப்பெயர்களுள் ‘இந்திரன்’ ஒன்று.
அந்தப் பெயரில் 1950-இல் ‘தேவன்’ எழுதிய சிறுகதை ஒன்று இதோ!







[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]


[ நன்றி: விகடன் : படம் : கோபுலு ]

தொடர்புள்ள பதிவுகள்:

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 36

டி.கே.பட்டம்மாள் - 4

 முந்தைய பதிவுகள் :


எனது இசைப்பயணம் -2
டி.கே.பட்டம்மாள்  


( தொடர்ச்சி ) 

எங்க ஸ்கூல் ஹெட்மிஸ்டிரஸ் ஸ்ரீமதி அம்முகுட்டி அம்மாள் இசை நாடகம் ஒண்ணு தயாரிச்சு என்னை நடிக்கவும் பாடவும் வெச்சா. நான் அதுலே சாவித்திரி வேஷம் போட்டேன்.”நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக தங்கப் பதக்கம் பரிசுபெற்ற காஞ்சிபுரம் கவர்ன்மெண்ட் உபாத்தியாயினி பயிற்சி பாடசாலையைச் சேர்ந்த டி.கே.பட்டம்மாள் “ என கொட்டை எழுத்துக்களுடனும், போட்டோவுடனும் அடுத்தநாள் பேப்பரில் நியூஸ் வெளியாயிடுத்து! அந்தக் காலத்துல இது ஒரு மாபெரும் புரட்சியாக்கும்! 
[ நன்றி: ஸ்ருதி ] 
இந்தச் செய்தியைப் படிச்சுட்டு, Columbia Gramaphone கம்பெனிகாரர்கள் ரிகார்டு கொடுக்கணும்னு என் அப்பாவை அணுகினார்கள். அந்தக் காலத்துல, ஸ்திரீகள் போட்டோ எடுத்துக்கறதே மகாபாவம். மற்றும் துர்லபமும் கூட. அதுலேயும் ரிகார்டு வேற கொடுப்பதா? என் அப்பா வேண்டாவிருப்பாகச் சம்மதித்தார். “முக்தியளிக்கும் திருமூல ஸ்தலத்தைக் கண்டு” பாடல்தான் நான் முதன்முதலா கொடுத்த ரிகார்டு!

திருப்புகழ் மாதிரி ஒரு இசை வடிவம் எந்த நாட்டு இசையிலும் கிடையாது. 108 அங்க தாளங்களையும் உள்ளடக்கி இந்த சந்தத் திருப்புகழை நமக்கு அளித்துள்ளார் அருணகிரிநாதர். சிம்ம நந்தன தாளம் கூட இதுல இருக்கிறதாகச் சொல்லுவா. காஞ்சிபுரத்தில திருப்புகழ் பாடல்களைப் பாடி வந்த வேலூர் ஸ்ரீ அப்பாதுரை ஆசாரி என்பவர்தான் எனக்கு திருப்புகழ், திருப்பாவை-திருவெம்பாவை, இராமலிங்க ஸ்வாமிகளின் அருட்பா ஆகியவைகளைக் கற்றுக் கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் நான், ஜகன்மோகினி ராகத்தில் அமைந்த “ நெஞ்சே நினை அன்பே துதி நெறி நீ குருபரனை ..” என்கிற பல்லவியைப் பாடுவேன். இது எனது மானசீக குரு காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையவர்கள் பாடிப் பிரபலமானதாகும். மிகவும் கடினமான பல பல்லவிகளை திருப்பதி ஸ்ரீமான் வித்யால நரசிம்மலு நாயுடு கற்றுக் கொடுத்தார்.

1929-ல் மதராஸ் கார்பரேஷன் ரேடியோவில் பாடினேன்.

1930-ல் ப்ரொபசர் சாம்பமூர்த்தி நடத்திண்டுருந்த Summer School of Music -ல நான் சேர்ந்தப்போ நல்ல நல்ல கிருதிகளைச் சொல்லிக் கொடுப்பார். ஒவ்வொரு வாரக் கடைசியிலும், ரஸிகர்கள் முன்னிலையில் நாங்கள் மாணவ, மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடுவோம். வீணை மற்றும் வயலினும் சொல்லிக் கொடுப்பா.உங்களுக்கு ஒண்ணு தெரியுமோ... நான் வீணையும், வயலினும் கத்துண்டு வாசிச்சும் இருக்கேன்! இந்த சமயத்துலதான் நன்னா பாடும் மாணாக்கர்களுக்கு கச்சேரி செய்ய வாய்ப்பும் கொடுப்பார்கள். எங்களுக்கு மயிலாப்பூர் ரஸிக ரஞ்சனி சபாவிலேயும், ஜார்ஜ் டவுன் கான மந்திரத்திலுமாக இரண்டு chance கிடைச்சுது.

முதன் முதலாக 1933-ல் ( எக்மோர் லேடிஸ் கிளப் ) சென்னை எழும்பூர் மஹிளா ஸமாஜத்தில் தான் என்னுடைய முதல் Public Performance  அரங்கேறியது. இதே வருஷம்தான் சென்னைக்கு குடிபெயர்ந்தோம். ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் சிஷ்யர் ஸ்ரீமான் வி.சி.வைத்யநாதன் அவர்களிடம் பல ‘அட தாள’ வர்ணங்களும், க்ஷேத்ரஞர் மற்றும் தமிழ் பதங்களும் கத்துண்டேன். காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை சிஷ்யர் என்.எஸ்.கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரிடம் “நாயனாப்பிள்ளை பாணி”யில் பாடல்கள் பாடமாச்சு .

ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கிருதிகள்னாலே எனக்கு உயிர். அவற்றை எனக்குக் கற்றுக் கொடுத்தவர் “ஸங்கீத கலாநிதி” நீதியரசர் T.L.வெங்கடராமய்யர் அவர்கள். அவரிடம் என்னை அம்பி தீக்ஷிதர்தான் அறிமுகப் படுத்தினார். அவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சொல்லிக் கொடுப்பார். நான் கீழே பாயில் உட்கார்ந்து கத்துப்பேன். பின்னர், அதைப் பிராக்டீஸ் பண்ணுவேன். அதையே திருப்பித் திருப்பிப் பாடிப் பார்த்துப்பேன். எத்தனை கிருதிகள் சொல்லிக் கொடுத்திருப்பார்! மகாமேதை அவர். அவர் மாதிரியெல்லாம் மனுஷாபிமாமானத்தோடும், பிரியத்தோடும் மனுஷர்களைப் பார்ப்பது அபூர்வம்...!

ஸ்ரீமான் T.L.வெங்கடராமய்யர் பற்றி இன்னொரு விசேஷமான விஷயம். ‘உனக்கு சங்கீத கலாநிதி பட்டம் கொடுக்கறதைப் பார்த்துட்டுதான் நான் உயிரையே விடுவேன்” என்று சொன்னார். அதன்படியே 1971 ஜனவரி 1 அன்று சதஸ் நடந்தபோது எனக்கு ஸங்கீத கலாநிதி பட்டம் வழங்கப் பட்டது. மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த அவரால் விழாவுக்கு வரமுடியலை. பின்னர், அவர் வீட்டுக்குச் என்று விருதைக் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கிண்டேன். சொல்லி வைத்தாற்போல் அன்றே அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஏதோ, நான் விருது வாங்குவதற்காகக் காத்து கொண்டிருந்தது போல் இருந்தார். என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி இது. அது மட்டுமில்லே. என்னால் தாங்கிக்க முடியாத பிருவுகள்ல இது ஒண்ணு. மற்றது என்னோடேயே உயிரோடு உயிராக கலந்திருந்த தம்பி D.K.ஜெயராமன் காலமானது.....”

( தொடரும் )

[ நன்றி “ ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]

தொடர்புள்ள பதிவுகள் :


வியாழன், 24 ஏப்ரல், 2014

குறும்பா - 4,5,6 : தீ, திருடன், சிறுத்தை

தீ, திருடன், சிறுத்தை
பசுபதி

4. தீ


பஞ்சென்பான் ஆலாய்ப்ப றந்தான்,
பரவசமாய்ப் பாவைபக்கம் வந்தான் !
. . . மஞ்சத்தில் ராசாத்-தீ !
. . . வாட்டியது  காமத்-தீ  !
வஞ்சியுடல் தொட்டபஞ்சு வெந்தான் !

*****

5. திருடன்



கன்னமிட்டான் காரிருளில் நம்பி

தந்திரமாய் ஜன்னல்கம்பி நெம்பி !
. . . குடியிருந்தவன் போலீசு !
. . . தடியெடுத்தவன் 'விளாசு' !
இன்றுநம்பி எண்ணுகிறான் கம்பி !

*****

6. சிறுத்தை 

சிரித்தபடி செல்கின்றாள் வீரி
சிறுத்தையதன் முதுகில்ச வாரி !
. . . திரும்பி னார்கள் சேரி ,
. . . சிறுத்தை வயிற்றில் நாரி ;
விரிந்தபுலி முகத்தில்நகை மாரி !

அல்லது

சிரித்தபடி செல்கின்றாள் வீரி

சிறுத்தையதன் மேலவள்ச வாரி !

. . . திரும்புகின்ற வழிதனிலே

. . . சிறுமிபுலி வயிற்றினிலே

சிறுத்தை முகத்தில்நகை மாரி 



(மூலம்: ஓர் ஆங்கில லிமெரிக் :
There was a young lady of Niger
Who smiled as she rode on a tiger;
They returned from the ride
With the lady inside,
And the smile on the face of the tiger )


தொடர்புள்ள பதிவுகள்: 
குறும்பா - 1
குறும்பா - 2, 3

குறும்பாக்கள்

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 35

டி.கே.பட்டம்மாள் -3
[ நன்றி; dkpattammal.org ]

முந்தைய பதிவுகள் :

( தொடர்ச்சி ) 
டி.கே.பி அவர்கள் மனம் திறந்து தன் வாழ்க்கை விவரங்களைப் பல நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். இப்படி ‘ஒரு திறந்த புத்தகமாய்’ப் பேசிய இசைமேதைகள் ஒரு சிலரே. சில கட்டுரைகளிலும் அவை பதிவாகியிருக்கின்றன. ‘ஸ்ருதி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையின் முதல் இரு இதழ்களில் ( அக்டோபர் , நவம்பர் 83) வெளிவந்த கௌரி ராம்நாராயணனின் ஆங்கிலக் கட்டுரை அவற்றுள் ஒன்று. அதே போல் ‘ஸரிகமபதநி’ என்ற தமிழ்ப் பத்திரிகையில் டிசம்பர் 2000-இல் வெளிவந்த தமிழ்க் கட்டுரையும் ஒன்று. அந்தத் தமிழ்க் கட்டுரையிலிருந்து , டி.கே.பட்டம்மாளின் சொற்களிலேயே, அவருடைய சில வாழ்க்கை நிகழ்வுகளையும், சில இசை நினைவுகளையும் இப்போது பார்ப்போம்.
எனது இசைப்பயணம் -1
டி.கே.பட்டம்மாள்  
[ ஒரு தொகுப்பு; நன்றி: சங்கர் வெங்கட்ராமன், ஸரிகமபதநி ]
நான் மூணு மாசக் குழந்தையாய் இருந்தபோது, எங்கள் அப்பாவும், அம்மாவும் திருவண்ணாமலையில் அருளாட்சி செய்துவந்த மகான் ஸ்ரீரமண மகரிஷி அவர்களது காலடியில் என்னைப் போட்டனர். அப்போ, பகவான் ரமணர் தேன்துளிகளை என் நாக்கில் தெளித்து ஆசீர்வாதம் செய்தாராம். இப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அடைய நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கணும்!

[ ஒரு குறிப்பு: தான் பிரபலமாக்கிய ”வள்ளி கணவன் “ என்ற கிளிக்கண்ணி மெட்டில் அமைந்த “வள்ளல் ரமணர் பேரை வழிபோக்கர் பாடினாலும் ...” என்ற ஒரு பாடலை டி.கே.பி பலமுறை பாடியிருக்கிறார். ] 
வட ஆற்காடு மாவட்டம் ஆரணியிலிருந்து, ‘தெலுங்கு வாத்தியார்னு ஒருத்தர். ஒரு கல்யாணத்துல நானும் என் அண்ணா ரங்கநாதனும் பாடினதைப் பார்த்துட்டு அப்படியே என்னை உச்சி முகர்ந்து ஆசீர்வதித்து “நான்தான் உனக்குப் பாட்டு சொல்லிக் கொடுபேன்”னார். எனக்கு அப்போ 6 வயசுதான். அவராகவே ஆசைப்பட்டு “கொலுவமரகத” “கோரினவரமு”, “லேகனா” “துளசி பில்வ” போன்ற கிருதிகளைச் சொல்லிக் குடுத்தார். நான் பிரபல பாடகியானதுக்கு அப்புறமா ஒருநாள் எங்காத்துக்கு ஒரு வயசான கிழவர், தலையெல்லாம் நரைச்சுப்போய் தள்ளாடிண்டு வந்தார். கடைசியிலே பார்த்தா இவர்தான். நான் அப்படியே அழுதுட்டேன். எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த குருவாச்சே. வேஷ்டி, அங்கவஸ்திரம், மற்றும் ஆயிரம் ரூபாய் சன்மானத்தோட கொடுத்தேன். அப்படியே திருப்பிக் கொடுத்துட்டார். “ என் பொண்ணு மாதிரியம்மா நீங்க! என் அன்பளிப்பா இதைக் கருதி வேஷ்டி, அங்கவஸ்திரத்தை என் மாப்பிள்ளைக்குக் கொடுக்கிறேன்”னு திருப்பிக் கொடுத்துட்டார். இன்னி வரைக்கும் அவரோட பெயர் தெரியாது! 
’கவர்ன்மெண்ட் டெக்னிகல் எக்ஸாமினேஷன் இன் மியூஸிக்’ பரிட்சைக்காக அப்பாவும், நானும் மதராஸ் வந்தோம். புரொபசர் சாம்பமூர்த்தி, டைகர் வரதாச்சாரியார் மற்றும் ஸ்ரீமான் அம்பி தீக்ஷிதர் ஆகியோர் எக்ஸாமினர்களாக இருந்தனர். அம்பி தீக்ஷிதர் “ ஸ்ரீசுப்ரமண்யாய நமஸ்தே ..” ( காம்போதி) பாடச் சொன்னார். டைகர் வரதாச்சாரியார் பிலஹரியில் “நா ஜீவாதார” பாடச் சொன்னார். பரீட்சை முடிந்ததும் எனக்கு ரொம்ப நல்ல எதிர்காலம் இருப்பதாக ஆசீர்வதித்து, தானே எனக்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார் அம்பி தீக்ஷிதர். இவர் சாட்சாத் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் பேரன். எனக்கு வீணையோட பாட்டு சொல்லிக் கொடுத்தார். அப்போதான் குரல் அழகா இழைஞ்சு, குழைஞ்சு வரும்னு சொல்லுவார். 
“பாலகோபால..” “கஞ்சதளாயதாக்ஷி”...கிருதிகளைச் சொல்லிக் கொடுத்து ஆசீர்வதித்தார். என்ன ஒரு மகாபாக்யம்? இது தவிர ராக ஆலாபனை செய்யும் முறைகளை காஞ்சிபுரம் பட்டு ஐயங்கார் அவர்களிடமும் “ரக்ஷபெட்டரே”(பைரவி), “இகநன்னுப்ரோவ” போன்ற கிருதிகளை சின்னமாள்னு ஒரு அம்மாளிடமும் கற்றேன். 
என்னோட மானசீக குருவாக காஞ்சிபுரம் சுப்பிரமணிய பிள்ளை அவர்களைத்தான் கருதுகிறேன். இவர் யார் தெரியுமா? காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளையேதான்! வயலின், மிருதங்கம், கடம், கஞ்சிரா, டோலக், மோர்சிங் மற்றும் கொன்னக்கோல்னு ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரியைத் துணிஞ்சு நடத்திக் காட்டிய இசைமேதை ஸ்ரீமான் நாயனாப் பிள்ளையவர்கள்தான். ராக பாவத்தையும், லய சமத்காரத்தையும் ஒரே தராசில் நிறுத்தாற்போல் சரிசமமாக பங்கிட்டு அளிப்பார்.



காஞ்சிபுரத்துலே என் பாட்டைக் கேட்டு, ரஸிச்சு தங்கள் வீட்டு நவராத்திரி கொலுவின்போது என்னைப் பாட அழைத்தார். என்னுடைய பாட்டைக் கேட்டுவிட்டு நாயனாப் பிள்ளை மிகவும் மனமகிழ்ந்து பாராட்டினார். அதன் நற்பலனாக அவருடைய தாயார் காமாட்சி அம்மாள் எனக்கு மாஞ்சி ராகத்தில் “ப்ரோவவம்மா” கிருதியைச் சொல்லிக் கொடுத்தார். அந்த சமயத்தில் தான் பிருந்தா-முக்தா ஸகோதரிகள் சின்னப் பெண்களா வருவா ....” 

( தொடரும் )

[ நன்றி : ஸரிகமபதநி, டிசம்பர் 2000 இதழ் ]

தொடர்புள்ள பதிவுகள் :


வியாழன், 17 ஏப்ரல், 2014

பதிவுகளின் தொகுப்பு: 201 – 225

பதிவுகளின் தொகுப்பு: 201 – 225




201. பதிவுகளின் தொகுப்பு: 176 – 200
202. சொல்லயில் : கவிதை
203. சங்கீத சங்கதிகள் – 20
சங்கீத சீசன் : 1954 – 1
204. தேவன் - 16: சில சங்கீத சங்கதிகள்!
205. சங்கீத சங்கதிகள் – 21
சில சங்கீத வித்வான்கள்
சங்கீத கலாநிதிடி.எல்.வெங்கடராமய்யர்
206. சங்கீத சங்கதிகள் – 22
சங்கீத சீசன் : 1954 – 2
207. சங்கீத சங்கதிகள் – 23
'சிரிகமபதநி
208. சங்கீத சங்கதிகள் – 24
கம்பனைப் பாட ஒரு புதிய ராகம்!
உ.வே.சாமிநாதய்யர்
209. சங்கீத சங்கதிகள் – 25
மதுரை சோமு – 1
210. சங்கீத சங்கதிகள் – 26
சங்கீத சீசன் : 1954 – 3
211. சங்கீத சங்கதிகள் – 27
மதுரை சோமு – 2
212. சங்கீத சங்கதிகள் – 28
அரியக்குடிக்குத் தம்பூரா போட்டார் --- செம்மங்குடி!
213. சங்கீத சங்கதிகள் – 29
எங்கள் பாரத நாடு!
214. பாரதி அறிஞர் ரா.அ.பத்மநாபன்
215. சங்கீத சங்கதிகள் – 30
மதுரை சோமு – 3
216. சங்கீத சங்கதிகள் – 31
எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
கல்கி
217. சங்கீத சங்கதிகள் - 32
மதுரை சோமு – 4
218. பி.ஸ்ரீ -4 : சித்திர ராமாயணம் -4
363. கழுகு மகாராஜா
பி.ஸ்ரீ   
219. உ.வே.சா -1
என் சரித்திரம் : சில துளிகள்
220. திருப்புகழ் - 9
திருப்புகழ் நூலுக்கு ஒரு வாழ்த்துரை
திருப்புகழடிமைசு. நடராஜன்
221. பி.ஸ்ரீ -5 : சித்திர ராமாயணம் -5
364. முகஸ்துதியா, சக்தி ஸ்துதியா?
பி.ஸ்ரீ
222. எஸ். எஸ். வாசன் – 1
எங்கள் ஆசிரியர்
கொத்தமங்கலம் சுப்பு
223. பி.ஸ்ரீ -6 : சித்திர ராமாயணம் -6
224. சங்கீத சங்கதிகள் – 33
டி.கே.பட்டம்மாள் -1
225. சங்கீத சங்கதிகள் – 34
டி.கே.பட்டம்மாள் -2

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

சசி - 8 ; புல்லிலிருந்து பால்!

புல்லிலிருந்து பால்!
சசி



ந்த ஆசாமியிடம் எனக்கென்னவோ சந்தேகம்தான் முதலில் உண்டாயிற்று. 'சர்வ சாதாரணமாக எங்கே கண்டாலும் மண்டிக்கிடக்கும் புல்லிலிருந்து நல்ல பாலைத் தயாரிக்க முடியும்' என்று அந்த ஆசாமி சொல்லும்போது, எப்படிச் சந்தேகம் உண்டாகாமல் இருக்கும்?

''அப்படி உங்களால் புல்லிலிருந்து பால் தயாரிக்கமுடியுமானால், இப்பொழுதே உணவு இலாகா டைரக்டரைப் பார்த்து ஏன் உங்கள் நூதன வழியைச் சொல்லப்படாது? பால் பஞ்சம் ஏற்பட்டிருக் கும் இந்தச் சமயத்தில் அதனால் எவ்வளவோ நன்மை ஏற்படக்கூடுமே! அதோடு, அந்த நூதன வழியைச் சொல்லிக்கொடுத்தால், உங்களுக்கும் ஏராளமான சன்மானம் கிடைக்குமே!'' என்றேன்.

''யாரிடம் அந்த மர்மத்தைத் தெரிவிப்பது என்று தெரியாமல்தான் முழிக்கிறேன்! ரகசியத்தைக் கற்றுக்கொண்டுவிட்டு, பிறகு பணம் தராமல் ஏமாற்றி விட்டால், என்ன செய்வதென்றும் பயமாக இருக்கிறது'' என்றார் அந்த ஆசாமி.

''அப்படி ஒன்றும் உங்களை ஏமாற்றிவிடமாட்டார்கள்! ஆமாம், நீங்கள் குறைந்தது எவ்வளவு தொகை எதிர்பார்க்கிறீர்கள்?''

''நானும் தேச நன்மைக்காகப் பாடுபடுகிறவன் தான், ஸார்! ஆகவே, நான் அப்படியன்றும் அதிகத் தொகை எதிர்பார்க்கிறவனல்ல. பத்து ரூபாய் கொடுத்தால் கூடப் போதும்!''

''பத்து ரூபாய்தானா... பூ..! அதை நானே கொடுத்துவிடுகிறேன். என்னிடம் சொல்லுங்கள் ரகசியத்தை. அதை உணவு இலாகா டைரக்டருக்குப் பிறகு நான் தெரிவித்துவிடுகிறேன்.''

''இப்படி அநேகர் என்னிடம் சொல்லி மர்மத்தைத் தெரிந்து கொண்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் ஓடிப்போய் விட்டார்கள். நான் யாரை நம்புவது?''

இவ்வாறு அவர் கூறியபோது, அவர் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டு இருந்தது. உடனே, நான் அவருக்குச் சில ஆறுதல் மொழிகளைக் கூறிவிட்டு, ''எல்லோரும் அயோக்கியர்களாக இருக்கமாட்டார்கள். இந்த உண்மையை நிரூபிப்பதற்காக இதோ இப்போதே நான் பத்து ரூபாய் கொடுக்கிறேன். முதலில் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு ரகசியத்தைச் சொல்லலாம்'' என்று பத்து ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.

சிறிது நேரம் அவர் என்னையே உற்றுப் பார்த்தவாறு, ஏதோ சிந்தனையிலிருந்தார். பிறகு, ''சரி, இந்தாருங்கள்! அந்த மர்மம் எழுதிய கடிதம் இந்தக் கவருக்குள் இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் பாருங்கள்'' என்று ஒரு கவரை என்னிடம் கொடுத்தார்.

அதை நான் ஒரு மூலைக்கு எடுத்துக் கொண்டுபோய், யாருக்கும் தெரியாமல் படித்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! புல்லிலிருந்து பால் எடுக்கும் விதம் பற்றித் தெளிவாகவும் வெகு சுருக்கமாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். உங்களுக்கும் உபகாரமாக இருக்கட்டும் என்று அதைக் கீழே பிரசுரிக்கிறேன்.

''தினந்தோறும் நல்ல பசும் புல்லை நிறையச் சேகரித்து, அதைக் கறவைப் பசுக்களுக்குப் போட்டு வாருங்கள். அவை அதைத் தின்று, நல்ல பாலைக் கொடுக்கும். புல்லிலிருந்து பால் கிடைக்க இதுவே வழி!''

[ நன்றி: விகடன் ] 

தொடர்புள்ள பதிவுகள்:

சசி: மற்ற படைப்புகள்

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

சங்கீத சங்கதிகள் - 34

டி.கே.பட்டம்மாள் -2 


[ நன்றி: http://www.dkpattammal.org/  ]

முந்தைய பதிவு :
டி.கே.பட்டம்மாள் -1

( தொடர்ச்சி)
28-1-45 கல்கி இதழில் ’கல்கி’ எழுதியது :

கர்நாடக சங்கீத வித்தை மிக அருமையானது. அந்த வித்தையிலே தேர்ச்சி அடைதல் எளிய காரியமன்று. அதற்கு இயற்கையோடு பிறந்த இசை உணர்ச்சி வேண்டும். இடைவிடாத உழைப்பும் பயிற்சியும் வேண்டும். இப்படி அரிதில் பெற்ற வித்தை நன்கு சோபிப்பதற்கு இனிய சாரீரம் வேண்டும். இந்த மூன்று அம்சங்களும் நன்கு பொருந்திய பாக்கியசாலி, கான ஸரஸ்வதி டி.கே.பட்டம்மாள். மதுரமும் கம்பீரமும் பொருந்திய சாரீரம், அசாதாரண லயஞானம், அழுத்தமான கமகப் பிடிகள், தெளிவான சாஹித்ய உச்சரிப்பு - இவை ஸ்ரீமதி பட்டம்மாளின் பாட்டில் விசேஷ அம்சங்கள். 

சவுக்க கால தீக்ஷிதர் கிருதிகளைப் பூரண ராக பாவத்துடன் பாடுவதிலும், அபூர்வ லய வேலைப்பாடுகள் பொருந்திய பல்லவிகள் பாடுவதிலும் பெயர் பெற்றவர். தமிழிசை இயக்கத்தின் முன்னணியில் நிற்பவர். ஸ்ரீமதி பட்டம்மாளின் கச்சேரிகளில் சாதாரணமாக எப்போதுமே தமிழ்ப் பாடல்கள் நிறைய இருக்கும். அவருக்கே தனி உரிமையான துக்கடாக்களில் கரகோஷம் நிச்சயம் உண்டு. 
[ நன்றி: பொன்னியின் புதல்வர், ‘சுந்தா’ ] 

‘கல்கி’ பட்டம்மாளைப் பற்றி எழுதினதைப் பார்த்தோம். ஆனால், பட்டம்மாள் ‘கல்கி’யைப் பற்றி எழுதினதைப் படிக்கவேண்டாமா? இதோ, அவர் “ அமரர் கல்கி பாடல்கள்” என்ற நூலுக்கு ( வானதி பதிப்பகம், 2003) கொடுத்த அணிந்துரையில் எழுதியது :

கல்கியின் தமிழ்ப் பற்றும் இசைப் பிரேமையும் அவருடைய ரசிகத்தனமையும் ஒன்று சேர்ந்துதான் பாடல்களாக வெளிப்பட்டன. அநேகம் பாடல்கள், ஏற்கனவே அமைந்த மெட்டுக்குள் பொருந்தும்படி எழுதப்பட்டவை. 

‘பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்’ என்ற பாட்டு, சைகால் பாடிய ஹிந்திப் பாட்டின் மெட்டுக்குள் அப்படியே பிசகாமல் பொருந்தும்.

இந்தப் பாடலை கல்கி எழுதியதும், நான் அதை முதன்முதலில் பாடியதும், பின்னர் அது இசைத்தட்டாக வெளியாகி அமோக வரவேற்பு பெற்றதும் பசுமையாக ஞாபகமிருக்கிறது. ‘பூங்குயில் பட்டமாள்’ என்று எனக்கொரு இனிய பட்டமும் வாங்கிக் கொடுத்தது இப்பாடல்! 
அழகான , எளிமையான தமிழ்; வெறும் வார்த்தையால் பாடலை வளர்க்காமல் காட்சி விவரணை மூலம் கதை சொல்லிக் கொண்டு போவது - இவை கல்கி பாடல்களின் முத்திரை.”  
[ நன்றி : அமரர் கல்கி பாடல்கள், வானதி பதிப்பகம், டிசம்பர் 2003 ]  

டி.கே.பட்டம்மாள் கச்சேரியில் பாடுவதற்கென்றே ‘கல்கி’ அவரிடம் நான்கு பாடல்கள் எழுதிக் கொடுத்தார். அவை : 1)குழலோசை கேட்டாயோ -கிளியே 2) பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள் 3) திரைகடல் தூங்காதோ 4) இன்பக் கனவொன்று துயிலினில் கண்டேன். 
இவை 1940-களில் இசைத்தட்டுகளாகவும் வெளிவந்தன.

டி.கே.பட்டம்மாள் திரைப்படங்களில் பாடியுள்ள பாடல்களையும் பலர் அறிவர். முதன் முதலில் எஸ்.எஸ்.வாசன் ’தியாகபூமி’யில் அவரைப் பாட அழைத்தபோது, டி.கே.பட்டம்மாள் போட்ட ‘கண்டிஷன்’ என்ன? அவரே சொல்லட்டும்!

சினிமாவில் பாடுவதற்கு ஜெமினி நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. வாசன் அவர்கள் தான் என்னை வரவேற்று உபசரித்தார்.

“எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நீங்களும் பாட்டுப் பாட வேண்டும். வருகிறீர்களா? “ என்று கேட்டார்.

”மிகவும் மகிழ்ச்சி” என்று சம்மதம் தெரிவித்ததோடு “ஒரேயொரு கண்டிஷன்” என்றேன். 

“என்ன” என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார் வாசன்.

“சினிமாவின் டூயட் பாடல்கள் பாடுவதில் எனக்கு விருப்பமில்லை. தேசபக்தி மற்றும் பொதுவான பாடல்கள் பாடுகிறேன்” என்று சொன்னேன்.

வாசனும் சந்தோஷமாகத் தலையசைத்தார். அதன்பின் ‘தியாகபூமி’, ‘மிஸ் மாலினி’ உட்பட சில படங்களில் பாடியிருக்கிறேன்” 
 [ நன்றி : அமரர் வாசன் நூற்றாண்டு மலர், விகடன், 2004]

( பின் குறிப்பு: ‘மிஸ் மாலினி’க்காக டி.கே.பி ‘ஸ்ரீ ஸரஸ்வதி நமோஸ்துதே’ என்ற பாடலைப் பாடினார். ஆனால், வாசன் கடைசியில் அதைப் படத்தில்  பயன்படுத்தவில்லை! ஏனென்றால் மாலினி என்ற அந்த பெண்மணியின் திரைப்படக் குணசித்திரப்படி அவள் அவ்வளவு அழகாக ஒரு பாடலைப் பாடி இருக்கமுடியாது என்று முடிவு செய்தார் ! இது ராண்டார் கை ஒரு கட்டுரையில் கொடுத்த தகவல்! )

‘தியாகபூமி’ படத்தில் ‘கல்கி’ யின் ‘பாரத புண்ணிய பூமி ‘, 'தேச சேவை செய்ய வாரீர்’, ‘பந்தம் அகன்று’ ஆகிய மூன்று பாடல்களையும் டி.கே.பட்டம்மாள் பாடியிருக்கிறார்.


இதோ இன்னும் சில திரையுலகப் பாடல்கள் பற்றிய தகவல்கள்:
[ நன்றி: ஸரிகமபதநி, டிசம்பர் 2000 ]

“பிழைக்கும் வழி” என்ற படத்தில் டி.கே.பி. பாடிய ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று! மதுரை சுந்தர வாத்தியார் எழுதிய பாடல். 

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு
பேரின்ப ஞான வீடு (எங்கள்)
கங்கை யமுனை பொருனை
காவேரியும் பாயும்
திங்களும் மும்மாரி பெய்து தீங்கனிகள் ஈயும் (எங்கள்)

தெள்ளுதமிழ் வேதம் தரும் வள்ளுவர் இந்நாடு
அள்ளும் கவி ஔவை கம்பன் அவதரித்த நாடு
சாந்தி தனில் நீந்தும் உயர் காந்தியர் இந்நாடு
தேர்ந்த ஞானி ராஜாஜி நேரு இந்த நாடு
தேர்ந்த வீரர் நேதாஜி நேரு இந்த நாடு (எங்கள்) 

பின் குறிப்பு: 


TAMIL RARE D.K. PATTAMMAL SONG-- Bharatha punya boomi(vMv)--THIYAGA BOOMI 1939


https://www.youtube.com/watch?v=V5tWnLDzoKE&feature=youtu.be


நண்பர் அனுப்பிய  “ குழலோசை கேட்டாயோ?”  என்ற பாடல்:


http://www.4shared.com/mp3/Fj7GTdCEce/Kuzhalosai_Kettayo_DKP.html


குழலோசை


இன்பக் கனவொன்று

பூங்குயில்


( தொடரும்) 
தொடர்புள்ள பதிவுகள் :

டி.கே.பட்டம்மாள்

சங்கீத சங்கதிகள்

DKPATTAMMAL-FILM-SONGS