பின்னத்தூர் நாராயணசாமி
ஐயர் வரலாறு
ஜூலை 30. பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் நினைவு தினம்.
குடும்பமும் தோற்றமும்
இவ் அந்தணப் பெரியார் அவதானிகள் (பன்னினைவாற்றல்)
குடும்பத்தில் பிறந்தவர், தந்தையார் அப்பாசாமி
ஐயர் என்னும் வேங்கட கிருட்டிண அவதானிகள். தாயார் சீதாலட்சுமி அம்மாள். ஊர் பின்னத்தூர்.
இது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த திருத்துறைப்பூண்டித் தாலுகாவைச் சேர்ந்தது. இவர்
கி. பி. 1862 செப்டம்பர் 10 புதன்கிழமை கொல்லம் 1038 ஆவணி 27ஆம் நாள் பிறந்தவர். இவர் தந்தையார் மருத்துவ நூற் புலவராய், அமைதிக் குண மிகுந்தவராய், அறவைத்தியம் செய்வதிலும் மெய்யடியார்களைப் போற்றுவதிலும்
தம் வாழ்நாளைப் போக்கிவந்தவர். குடும்பத்திற் குரிய சொத்துக்களைப் பேணி வளர்ப்பதில்
சிறிதும் கவலையற்றவர். இவர் தந்தையுடன் பிறந்த பெண்கள் இருவர் மணம்முடிந்த சின்னாளிலேயே
கைம்பெண்டிராய்த் தமையன் வீட்டிலே தங்கி வாழ்ந்துவந்தனர். நம் புலவருடன் பிறந்தவர்கள்
ஆடவர் மூவர், பெண்கள் மூவர். ஆடவருள் மூத்தவர்
நம் புலவரே. இவர்களையெல்லாம் அன்புடன் வளர்த்து வந்தவர் இவர் அத்தையாகிய சேசியம்மாள், இது நம் புலவர்பாடிய "பழையது விடுதூது" என்னும்
பாடல் நூலில்,
"ஒத்த அன்பில் பல்கதைகள்
ஓதிஉவந் தேசேசி
அத்தை இனி தூட்டும் அன்னமே"
என்னும் அடிகளால் விளங்கும்.
இளமையும் கல்வியும்
இவர் இளமையிலேயே சிறிது வடமொழி கற்றுக்கொண்டதோடு
மறையும் ஓதிவந்தார். இவர் பதின்மூன்று அகவை வரை பின்னத்தூரில் பள்ளிக்கூடம் வைத்திருந்த
கிருட்டிணாபுரம் முத்துராம பாரதியாரிடம் தமிழ் கற்றுவந்தார். இவர் மன்னார்குடிக்குச்
சென்றிருந்த காலத்தில், ஆங்குள்ள ஆங்கிலப்பள்ளித்
தமிழ்ப் பண்டிதர் நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்ப இராமாயணத்திற் சில செய்யுட்களுக்குப்
பொருள் விரித்துரைத்துக்கொண்டிருந்தனர். அதைக் கேட்ட நம் இளம்புலவர் கம்ப இராமாயணம்
கற்க ஆவல் மிகுந்தார். சுந்தரகாண்டமே முதலில்
வாங்கிப் படித்தார். பாட்டுக்களை நெட்டுருப்பண்ணும்
ஆற்றல் இவர்க்கு இயல்பாகவே அமைந்திருந்தமையால், இவர் எதைப்
படித்தபோதிலும் நெட்டுருப் பண்ணிக்கொண்டே வந்தார். இவர் தமிழ் படிக்க வேண்டும் என்னும்
அவாவினால் "ஏடது கைவிடேல்" என்பதற்கேற்ப எப்போதும் புத்தகமும் கையுமாகவே
இருப்பார். இச் செயல், அத்தையார் சேசி அம்மாளுக்கு மாத்திரம் அருவருப்பாயிருந்தது. இவர் தமிழ் படிப்பதில்
காலம் போக்குவதை அவர் அடிக்கடி கடிந்து வந்தார்; ஆகவே அத்தையார்
அறியாதிருக்க, இவர் வயல் வரம்புகளிலும் கருவேல மரத்தின் கீழுமிருந்து கல்வி கற்பவராயினர். தம்
மருமகன் கல்வியிற் காலம் போக்குவது குடும்ப காரியத்திற்கு இடையூறாகும் என்று கருதினர்போலும்.
காவியப் பயிற்சியும் கவிவன்மையும்
ஆசிரியர் உதவியின்றித் தமிழ்நூல்களைத்
தாமே கற்றுத் தேர்ச்சிபெற்ற இவர் கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தார். "ஆசான் உரைத்தது
அமைவரக் கொளினும், காற்கூறல்லது பற்றல னாகும்" என்று பாயிரம் கூறுமாயின், ஆசானின்றியே கற்ற ஐயரிடத்தில் ஐயங்கள் முற்றும் இல்லாமல் இரா. ஐயந்தீரப் பொருளை
உணர்த்தும் ஆசிரியர் ஒருவரை அவாவிநின்றார். இக்குறை தீருங்காலம் வாய்த்தது. திருமறைக்காட்டில்
பொன்னம்பலப் பிள்ளை என்னும் புலவர் தலைமணி வீற்றிருந்தனர். இவர் யாழப்பாணம் நல்லூர், ஆறுமுகநாவலர் அவர்கள் மருகரும், மாணவரும் ஆவர். இளம்பூரணம் நச்சினார்க்கினியம்
முதலிய உரைகளோடு தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், சிந்தாமணி, சிலப்பதிகாரம், கந்தபுராணம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் பலமுறை ஆராய்ந்து கற்றவர். அவற்றைப் பல மாணவர்க்கும்
கற்பித்தவர். பரிமேலழகர் உரையை ஒருபோதும் மறவாதவர். பாரதத்தில் ஆதி பருவத்திற்கும், மயூரகிரிப் புராணத்திற்கும் உரை செய்தவர். இராமாயணப்பொருள் உணர்ச்சியில் இணையில்லாதவர். இனிய மிடற்றிசை எய்ந்தவர். பிழையறப்
பொருள்கூறிச் சொற்பொழிவு செய்யும் பேராற்றல் வாய்ந்தவர். இன்ன புலவர் உறைவிடம் அடைந்து
அவர்தம் நட்புக்கொண்டு, தமக்கேற்பட்டிருந்த ஐயங்களையும்தீர்த்துக்கொண்டனர்.
அவரிடமே தமிழ்ப்பெருங் காப்பியங்கள் ஐந்தனுள் முதலதாகிய சிலப்பதிகாரத்தையும் பாடங்
கேட்டனர். அவர் முன்னிலையில் "நீலகண்டேச்சுரக் கோவை" பாடி அரங்கேற்றினர்.
அப் புலவர் விரும்பியபடியே, காளிதாசர் இயற்றிய பிரகசன என்னும்
நாடகத்தையும் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்தார்.
நூல் இயற்றலும் ஆராய்ச்சியும்
நம் ஐயர் அவர்கள், தமிழ்நாட்டின் பழ வரலாறுகளை ஆராய்வதில் மிக்க விருப்பமுள்ளவர். கோயில்களிலும், அவைபோன்ற வேறு இடங்களிலும் வெட்டியுள்ள பழங்கல்வெட்டுக்களைப் படித்தறியும் திறம்பெற்றவர்.
தமிழ்ப் புலவர்களின் வரலாறும் நன்கு உணர்ந்தவர். புலவர்கள் பல்வேறு சமயங்களிற் பாடிய
நற்கவிகளை எல்லாம் மன அறையில் அமைத்து, வேண்டும்போது எடுத்துரைக்கும்
வன்மை வாய்ந்தவர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பயிற்சிச் சிறப்பு விளங்க அதில் எடுத்துக்காட்டிய
மேற்கோள்களுக்கு எல்லாம் ஓர் அகராதியும் எழுதிவைத்துள்ளார். இவர் இயற்றிய தமிழ் நூல்களும்
உரை நூல்களும் பல. அவற்றுள், அச்சேறியவை மாணாக்கராற்றுப்படை
1. இயல்மொழி வாழ்த்து 2. தென்தில்லை (தில்லைவிளக்கம்)
உலா 3.
தென்தில்லைக் கலம்பகம் 4. களப்பாழ்ப் புராணம் 5. இராமாயண அகவல் 6. அச்சாகாதவை : இறையனார் ஆற்றுப்படை, பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், நீலகண்டேச்சுரக் கோவை, சிவகீதை, சிவபுராணம், நரிவிருத்தம், பழையது விடுதூது, மருதப் பாட்டு, தமிழ் நாயகமாலை, செருப்பு விடுதூது, அரதைக் கோவை, வீர காவியம் என்பன. இறுதி இருநூல்களும் முற்றுப்பெறாதவை.
நற்றிணை வெளியீடும் புலவர் நாள் இறுதியும்
இவர் சங்க நூலாகிய எட்டுத் தொகையுள்
குறுந்தொகை; நற்றிணை, அகநானூறு என்பனவற்றை உரையுடன் வெளிப்படுத்த வேண்டுமென்று பெருமுயற்சி செய்து நற்றிணைக்கு
உரை எழுதி முடித்தனர். இவர் 1899 ஜூலை 28 முதல் தம் வாழ் நாளளவும் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக
வேலை பார்த்து வந்தவர். நீரிழிவு நோயால் மெலிந்து தளர்ந்தவர். அகநானூற்றுள்ளும் பல
பாட்டுக்களுக்கும் உரை எழுதியுள்ளார். நற்றிணையையாவது உரையுடன் அச்சிட்டுக்காண அவாவினார்.
இவர் இறக்குமுன் நற்றிணை உரை முழுவதும் அச்சாகிவிட்டதேனும், பாடினோர் வரலாறும் பாடப்பட்டவர் வரலாறுமே பின்னர் அச்சிடப் பெறுவவாயின. இவருக்கு
இரண்டு பெண்மக்கள் உளர். தம்மை வருத்திய நீரிழிவு நோய் நீங்காது, ஆனந்த ஆண்டு ஆடித்திங்கள் 15ஆம் நாள் வியாழக்கிழமை (30-7-1914) பின்னத்தூரில் தம் உரிய மனையில் நிலஉலக வாழ்வை நீத்துச் சிவன் இணையடி நீழல் அடைந்தனர்.
தொடர்புள்ள பதிவுகள்: